×

நாகர்கோவிலில் கடும் போக்குவரத்து நெருக்கடி 1 மணி நேரம் வரை சிக்கி திணறிய வாகனங்கள்

நாகர்கோவில்: ஒழுகினசேரியில் ரயில்வே பணி காரணமாக சாலை அடைக்கப்பட்டதால், வடசேரியை சுற்றி உள்ள சாலைகளில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 1 மணி நேரம் வரை குறுகிய சாலைகளில் வாகனங்கள் சிக்கி திணறின. கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே நடந்து வரும் இரட்டை ரயில் பாதை பணியின் ஒரு கட்டமாக நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கான பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. புதிய பாலம் அமைக்கும் பணி பாதியில் நிற்கும் நிலையில் கூடுதல் தண்டவாளம் அமைப்பதுடன், பழைய பாலத்ைத இடிக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து பணிகளை தொடங்கி உள்ளது.

இதன் காரணமாக தற்போது ஒழுகினசேரியில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகரின் நுழைவு வாயில் பகுதி என்பதால், தற்போது நாகர்கோவிலுக்குள் வாகனங்கள் வருவதற்கும், நாகர்கோவிலில் இருந்து வாகனங்கள் வெளியேறவும் முடியாமல் சிக்கி திணறி வருகின்றன. ஒழுகினசேரி வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள், பஸ்கள், லாரிகள் உள்பட அனைத்தையும் வடசேரி அசம்பு சாலை, புத்ேதரி நான்கு வழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளனர். இதில் அசம்பு ரோடு வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி சந்திப்பு முதல் வடசேரி எம்.ஜி.ஆர் சிலை சந்திப்பு வரை குறுகலான சாலையாகும். இதன் வழியாக அனைத்து வாகனங்களும் செல்வதால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் சிலை முதல், எஸ்.எம்.ஆர்.வி சந்திப்பு வரை 5-க்கும் மேற்பட்ட போலீசார், குறிப்பிட்ட இடைவெளியில் நின்று சாலையில் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். ஆனாலும் நெருக்கடி தீர்ந்த பாடில்ைல. இந்த நெருக்கடியை சமாளிக்க இரு சக்கர வாகனங்கள், கார், ஆட்டோக்கள் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி வடசேரி ஆறாட்டு ரோடு வழியாக செல்கின்றன. இதே போல் சோழராஜா கோயில், வடசேரி வெள்ளாளர் கீழ தெரு, கிருஷ்ணன்கோவில் விஏஓ ஆபீஸ் – சிபிஎச் ரோடு என குறுகிய சாலைகளில் சென்று வருகின்றன.

இன்று காலையிலும் இந்த குறுகிய சாலைகளில் பைக்குகள், ஆட்டோக்கள், கார்கள் சென்றன. இதனால் நெருக்கடி கடுமையாக இருந்தது. குறிப்பாக பள்ளி வேன்கள், ஆட்டோக்கள் அதிகளவில் சென்றதால், வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின. வடசேரி எஸ்எம்ஆர்வி சந்திப்பு முதல் ஆறாட்டு ரோடு வழியாக சென்ற வாகனங்கள் சுமார் 1 மணி நேரம் வரை சிக்கி திணறின. இதே போல் அசம்பு ரோட்டிலும் கடுமையான நெருக்கடி இருந்தது. வடசேரி எம்.ஜி.ஆர். சிலை சந்திப்பில் திரும்ப வேண்டிய பஸ்கள், வாகனங்கள் திரும்ப முடியாமல் திணறின.

இதனால் எம்.ஜி.ஆர். சிலை சந்திப்பில் இருந்து வடசேரி காசி விஸ்வநாதர் கோயில் சந்திப்பு வரை வாகனங்கள் நின்றன. இதே வடசேரி அசம்பு ரோட்டில் புத்தேரி மேம்பாலம் வரை வாகனங்கள் சிக்கி நீண்ட வரிசையில் நின்றன. பெரும் சிரமத்துக்கு இடையே தான் போக்குவரத்து போலீசாரும் நின்று வாகனங்களை சீரமைத்தனர். அதிகாரிகள் எதை பற்றியும் சிந்திக்காமல் போக்குவரத்தை மாற்றி அமைக்க உத்தரவிடுகிறார்கள். இதனால் மக்கள் படும் சிரமத்தை அவர்கள் உணர்வதில்லை என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வேதனையுடன் கூறினர்.

The post நாகர்கோவிலில் கடும் போக்குவரத்து நெருக்கடி 1 மணி நேரம் வரை சிக்கி திணறிய வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Nagarko ,Vadasheri ,Osuginaseri ,Kanniyakumari ,Thiruvananthapuram ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் சென்டர் மீடியனில் மோதி விபத்தில் சிக்கிய டாரஸ் லாரி