×

மயக்கும் மாங்குரோவ் காடுகளுக்கு மத்தியில் காரங்காட்டில் ‘கவர்ந்திழுக்கும்’ கடல் தீவுகள்


ஆர்.எஸ்.மங்கலம்: திருவாடானை அருகே, காரங்காட்டில் மாங்குரோவ் காடுகளுக்கு மத்தியில் இருக்கும் கடல் தீவுகளை ரசிக்க ஒரு முறை போய் வாருங்கள். ஜாலியான படகு சவாரி செல்லும்போது தண்ணீரில் துள்ளிக் குதிக்கும் மீன்களை ரசிக்கலாம். மரங்களில் சிறகடிக்கும் அரிய வகை பறவைகளையும் காணலாம். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் காரங்காடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு 73 ஹெக்டேர் பரப்பளவில் மாங்குரோவ் (அலையாத்தி) காடுகள் அமைந்துள்ளன. இங்கு சமூகம் சார்ந்த சுற்றுலாத் தலம் அமைக்கப்பட்டுள்ளது. காண்பதற்கு கவர்ச்சியாகவும், அழகிய தோற்றமுடன் மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ளன. இந்த காடுகள் சுனாமி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் திறன் கொண்டவை.

இந்த காடுகளுக்கு அருகில் பக்கவாட்டில் கடற்கரை தீவுகள் அமைந்துள்ளன. தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கம் மற்றும் பசுமையாக்கல் திட்டம் சார்பில் பொதுமக்கள் தீவுகளையும், இயற்கை அழகையும் கண்டு ரசிக்கும் வகையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் செலவில் வாட்ச் டவர் என்னும் காட்சிக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏறிப் பார்த்தால் கடல் பகுதி, தீவுகள், மாங்குரோவ் காடுகள் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். நமது நாட்டில் அந்தமான், கோவா ஆகிய இடங்களில் மட்டுமே இருக்கும் கடலுக்குள் மூழ்கி மீன்களை பார்க்கும் ஸ்டாட் பீஸ் (ஸ்நோர் கெலிங்) என்கின்ற ஒரு அபூர்வமான முறை இங்கு உள்ளது.

* காரங்காட்டில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

காரங்காட்டில் மாங்குரோவ் காடுகளுக்கு இடையே கடலில் படகில் சவாரி சென்று இயற்கை அழகை ரசிக்க, சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருகை தடுகின்றனர். இங்கு முக்கிய அம்சமாக படகோட்டி மூலம் படகு சவாரி செய்யலாம். கடலில் பயணம் செய்யும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் படகில் சவாரி செல்ல பெரியவர்களுக்கு ரூ.200, சிறியவர்கள் 5 வயதிலிருந்து 12 வயது வரை ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. போட்டிங்கில் போகும்போது மாங்குரோவ் காடுகளில் உள்ள மரங்களில் அரிய வகை பறவைகளையும், தண்ணீரில் துள்ளி குதித்து விளையாடும் மீன்களையும் கண்டு ரசிக்கலாம். கடல் நீரில் மூழ்கி (ஸ்மார்ட் லிங்) கடலில் உள்ள நட்சத்திர மீன்கள், கடல் குதிரைகள், நண்டு மற்றும் மீன் வகைகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களை பார்க்கலாம். காரங்காட்டுக்கு குறைந்த செலவில் சுற்றுலா செல்லலாம். காரங்காட்டில் சூழல் மேம்பாட்டு குழு தொடங்கப்பட்டு, அதில் செயலாளராக வனத்துறை சரக அலுவலர் உள்ளார். இந் நிர்வாகத்தின் கீழ் வனத்துறை வழிகாட்டுதல்படி இந்த சுற்றுலா மையம் நடைபெற்று வருகிறது.

* கண்களுக்கு மட்டும் விருந்தல்ல… நாவுக்கும் விருந்து

சுற்றுலாவிற்கு வருவோருக்கு கணவாய் கட்லட், இறால், நண்டு சூப், மீன் குழம்பு உள்ளிட்ட வாய்க்கு ருசியாக அனைத்து வகையான கடல் பொருட்களும் உணவாக வழங்கப்படுகிறது. கடலில் பிடித்த உடனே சமைத்து தருவதால் இந்த உணவு வகைகள் மிகுந்த சுவையாக இருக்கும். இங்கு பிடிக்கப்படும் நண்டு, கணவாய் உள்ளிட்டவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வனத்துறை சார்பில் படகுகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், அமர்ந்து உணவருந்தும் இடவசதி, போட்டிங் செல்வோர் காத்திருப்பு வசதிக்கான இடம், கேண்டின் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை மூலம் இயங்கும் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயார் செய்யப்படும் மீன் ஊறுகாய், இறால் ஊறுகாய், பனங்கருப்பட்டி, பனைஒலைகள் மூலம் செய்யக் கூடிய கைவினைப் பொருட்கள் மலிவு விலையில் விற்கப்படுகிறது. இங்கு இயற்கை சார்ந்த நாட்டுப்புற உணவு பொருட்களை மட்டுமே விற்கப்படுகிறது.

* வசதிகளைப் பெருக்கலாமே…

காரங்காட்டில் சாலை வசதி, கூடுதல் படகு வசதி, தீவுகளில் உள்ள வாட்ச் டவருக்கு செல்லும் கூடுதல் வசதி, படகு நிறுத்தி வைக்கும் ஜெட்டி, கொடைக்கானலில் உள்ளது போல் பெடல் போர்ட் மற்றும் குழந்தைகளுக்கான பிளே ஏரியா, கிட்ஸ் ஏரியா ஆகிய அடிப்படை வசதிகள் செய்தால், இவ்விடம் சிறந்த சுற்றுலா தலமாக மாறிவிடும் என்பதற்கு ஐயமில்லை. இந்த சமூகம் சார்ந்த சுற்றுலா தலமானது ராமநாதபுரம் வன உயிரின காப்பாளரின் வழிகாட்டுதலின்படியும், வனசரகர் உள்ளிட்டோர்கள் முன்னிருந்து நடத்தி வருவதுடன் சுற்றுலா பயணிகளுக்கு கடல் சார்ந்த கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் காடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

The post மயக்கும் மாங்குரோவ் காடுகளுக்கு மத்தியில் காரங்காட்டில் ‘கவர்ந்திழுக்கும்’ கடல் தீவுகள் appeared first on Dinakaran.

Tags : Karangat ,RS Mangalam ,Thiruvadan ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு