×

கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே நடக்கும் இரட்டை ரயில் பாதை பணிக்கு ரூ. 365 கோடி ஒதுக்கீடு

நாகர்கோவில்: கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே நடக்கும் இரட்டை ரயில் பாதை பணிக்கு, ரூ.365 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 4027.08 கி.மீ தூரத்துக்கு ரயில்வே இருப்புபாதை வழித்தடங்கள் உள்ளன. நாட்டின் தென்கோடி பகுதியான கன்னியாகுமரியில் இருந்து தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை செல்லும் வழித்தடம் மிக முக்கியமான ரயில் வழி தடம் ஆகும். இந்த வழி தடம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூரை சென்றடைகிறது.  இந்த வழி தடம் வழியாக தென் தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் சென்று வருகின்றன.

சென்னை முதல் மதுரை வரை உள்ள 490 கி.மீ. பாதை இரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நாகர்கோவிலிருந்து மதுரை வரை உள்ள பாதையை இரு வழிபாதையாக மாற்ற மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி 159 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோவில் 102 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும் செயல்படுத்தப்படுகிறது. இதில் நாகர்கோவில் – மணியாச்சி பாதை திட்ட மதிப்பீடு ரூ. 1752.25 கோடி ஆகும். இந்த திட்டத்தில் ரயில்வே துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஆர்.வி.என்.எல். நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோவில் இடையிலான 102 கி.மீ. தூர திட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. நாகர்கோவில் – திருநெல்வேலி ரயில் பாதையில், ஆரல்வாய்மொழி, மேலப்பாளையம் பகுதிகளில் மட்டும் பணிகள் பாக்கி இருந்தன. இதில் ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் இடையே பணிகள் முடிந்து சோதனை இன்ஜினும் இயக்கப்பட்டுள்ளது. மேலப்பாளையம் பகுதியில் நடைபெற வேண்டிய பணிகளும், தற்போது முடிவடைந்துள்ளன. பிப்ரவரி இறுதிக்குள் பணிகள் முடிந்து, சோதனை முறையில் ரயில்கள் இயக்கப்படும் என தெரிகிறது.

இதற்கு அடுத்த படியாக கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில்பாதை பணிகளை பொறுத்தவரை கேரளாவில் 38 சதவீதமும், தமிழ்நாட்டில் 15 சதவீதமும் நில ஆர்ஜிதம் நடந்து முடிந்து இருந்தது. நில ஆர்ஜித பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்ெகாள்ளப்பட்டு வந்தது. தற்போது நில ஆர்ஜித பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்த திட்டத்துக்காக கேரளாவில் திருவனந்தபுரம் முதல் பாறசாலை வரை 35.2 ஹெக்டரும், அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி வரை தமிழ்நாடு பகுதியில் 47.73 ஹெக்டரும் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டி உள்ளது. இதில் தமிழ்நாடு பகுதியில் 6.65 ஹெக்டர் மட்டுமே நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு இருந்தது. மேலும் 41.08 ஹெக்டர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட இருந்தது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி சிறப்பு தாசில்தார் நியமிக்கப்பட்டு நில ஆர்ஜித பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்தநிலையில் கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை பணிக்கு நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ.365 கோடி ஒதுக்கீடு செய்து, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உத்தரவிட்டுள்ளார். நில ஆர்ஜித பணிகளுக்காக ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது என்றும், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி கட்டமைப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

The post கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே நடக்கும் இரட்டை ரயில் பாதை பணிக்கு ரூ. 365 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Thiruvananthapuram ,Nagercoil ,track ,Tamil Nadu ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?