×

மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் மகன் வீடுமீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தை: சோழவரம் போலீசார் விசாரணை

புழல்: செங்குன்றம் அருகே நேற்று மாலை மது குடிப்பதற்கு பணம் தராத ஆத்திரத்தில், மகன் வீட்டின்மீது தந்தை பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தந்தையிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். செங்குன்றம் அருகே நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், நேதாஜி தெருவை சேர்ந்தவர் குருசாமி (60). மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, மகன் தினேஷ் (30) மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி, தனித்தனியே வசிக்கின்றனர்.

மகன் தினேஷ் லாரி மெக்கானிக். குருசாமியின் மனைவி இறந்து போனதால், மகன் மற்றும் மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். தந்தை குருசாமி மற்றும் மகன் தினேஷுக்கு மதுப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை மதுபோதையில் இருந்த தனது மகன் தினேஷிடம் மது குடிப்பதற்கு தந்தை குருசாமி பணம் கேட்டுள்ளார். பணம் தர தினேஷ் மறுத்துள்ளார். இதனால் தந்தை-மகனுக்கு இடையே வாய்த்தகராறு முற்றியது. பின்னர் வெளியே சென்ற குருசாமி, நேற்றிரவு மதுபோதையில் மகன் வீட்டுக்கு திரும்பினார். அவரது கையில் பெட்ரோல் குண்டுகள் இருந்தன. பின்னர் தனது மகனை வெளியே அழைத்த குருசாமி, எனக்கு மது குடிக்க பணம் தரமாட்டேன் என்று சொன்னியே… இப்போ பார், உன் வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீசுகிறேன் என்று கூறியபடி, மகனின் வீட்டின்மீது ஒரு பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது.

இதில் அதிர்ச்சியான மகன் தினேஷ், உடனடியாக ஓடிச்சென்று அது வெடிப்பதற்குள் தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டார். இதற்குள் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, குருசாமியின் கையில் இருந்த மேலும் சில பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றினர். தினேஷ் அளித்த புகாரின்பேரில் சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெட்ரோல் குண்டு வீசிய குருசாமியை கைது செய்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் மகன் வீடுமீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தை: சோழவரம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Cholavaram ,Puzhal ,Senkunram ,Dinakaran ,
× RELATED துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு