×
Saravana Stores

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா

நன்றி குங்குமம் டாக்டர்

எனக்கு ஐம்பது வயதாகிறது. உயர் ரத்த அழுத்தம் உண்டு. அதற்கு மாத்திரை சாப்பிடுகிறேன். சர்க்கரை கட்டுக்குள் உள்ளது. என் தந்தைக்கு வழுக்கைத் தலை. எனக்கு இத்தனை நாட்கள் முடி அளவாக இருந்தது. திடீரென இரு மாதங்களாக முடி அதிகமாக உதிர்கிறது. முன்புறம் என் தந்தை போலவே வழுக்கையாகிவருகிறது. இது வயதின் காரணமாக வரும் பரம்பரை வழுக்கையா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா?

ஆர்.மனோகரன், பொள்ளாச்சி.

பொதுவாக, எல்லோருக்கும் தினசரி முடி உதிர்வு இருக்கும். ஆனால், கண்ணுக்குத் தெரியும்படியும் நாம் உணரும்படியும் கணிசமாக முடி கொட்டினால் அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பரம்பரை ஒரு காரணம் என்றாலும் அது மட்டுமே முக்கியக் காரணம் என்று நாம் கருத வேண்டியதில்லை. ஹார்மோன் குறைபாடு, உணவில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றாலு முடி கொட்டும். ஸ்கால்ப் எனப்படும் மண்டையின் மேற்புறத் தோல்பகுதியில் ரத்தம் ஓட்டம் குறைவதாலும் முடி கொட்டும்.

புகை பிடித்தல், அதிக நேரம் ஹெல்மெட் அல்லது தொப்பி அணிதல் போன்ற காரணங்களாலும் முடி கொட்டும். ஆரோக்கியமான உடலில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ஐம்பது முதல் நூறு முடிகள் வரை உதிரும். ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்டால் அதன் காரணமாக எதிர்ச்புசக்தி அதிகரித்து மேற்புறத் தோல் பாதித்து அதனாலும் முடி உதிரக்கூடும். மருத்துவரை நாடி எதற்காக முடி உதிர்கிறது என்பதைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது நல்லது.

பிறந்து பத்து மாதங்களாகும் என் மகனுக்குத் தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். இனிப்பு, குளிர்பானம், வெங்காயம் உள்ளிட்ட உணவுகளை நான் சாப்பிட்டால், தாய்ப்பால் குடிக்கும் மகளுக்கு ஜலதோஷம் பிடித்துக்கொள்கிறது. இதனால் அச்சமும் குழப்பமும் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னைக்கான தீர்வை அறிய விரும்புகிறேன்.
வே.ராஜகீதா, சேலம்.

நீங்கள் சாப்பிடும் எந்த உணவும், அப்படியே நேரடியாகக் குழந்தைக்குச் செல்வதில்லை. உணவுகள் செரிமானமாகி, `தாய்ப்பால்’ என்ற உலகின் மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவாகத்தான் குழந்தைக்குச் செல்கிறது. எனவே, தாய்ப்பாலால் குழந்தைக்கு எந்த வகையிலும் ஊட்டச்சத்து சார்ந்த பாதிப்புகள் ஏற்படாது. ஒருவேளை நீங்கள் சாப்பிடும் சில உணவுகளால் குழந்தைக்கு ஜலதோஷம் பிடிக்கிறதென்றால், தாய்ப்பால் கொடுப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் அவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

அப்படியும் பிரச்னை தொடர்ந்தால், குழந்தையுடன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். தாய்ப்பால் கொடுக்கும் நீங்கள் ஆரோக்கியமான புரோட்டீன், கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து வகை உணவுகளை இந்த வரிசையின்படி முக்கியத்துவம் கொடுத்துச் சாப்பிடுங்கள். உங்கள் நலமும் குழந்தையின் நலமும் சிறப்பாக இருக்கும்.

நெஞ்சுவலியானது இல்லாமலேயே மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பல பேரை நாம் பார்க்கிறோம். அதைப் பற்றி விளக்கமுடியுமா ?

கு.காமராஜ், சென்னை.

இதை சைலன்ட் அட்டாக் என கூறுவார்கள். நாம் முந்தைய வீடியோக்களில் பார்த்தது போல், சில பேர் கையில் லேசாக வியர்த்தது என்பார்கள், சில பேர் முதுகு லேசாக வலிக்கிறது என்பார்கள் இப்படி பல காரணங்களை கூறுவார்கள். சில பேர் மூச்சு சரியாகிவிடமுடியவில்லை என்று மருத்துவமனைக்குச் செல்வார்கள்.

ஆனால் மருத்துவர் ஈசிஜி எடுத்த பின்பு உங்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு மாரடைப்பானது வந்துள்ளது என்பர். இருதயத்தில் இருந்து வரும் வலியை ஏற்படுத்தும் நரம்பு மாரடைப்பு வரும்போது பாதிக்கப்பட்டால், அந்த நபருக்கு வலியை உணர முடியாது. இது யாருக்குப் பொதுவாக இருக்கும் என்றால் நீரிழிவுநோய் உள்ளவர்களுக்குத்தான். நீரிழிவுநோய் இல்லாதவர்களுக்கும் இது நேரிடலாம். ஆனால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குத் தான் இது அதிகம் நேரிட வாய்ப்பு உள்ளது.

இந்த வகை மாரடைப்பானது சிறிய அளவிலும் இருக்கலாம், அல்லது பெரிய அளவிலும் இருந்து உயிரைப் பறிக்கக் கூடிய ஒன்றாகவும் போகலாம். எனவே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யும்போது மருத்துவர் உங்களுக்கு ஏற்கெனவே முதல் அட்டாக் வந்து இருக்கிறது என்று கூறினால், அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லை என மறுதலிக்கக் கூடாது. காரணம் பிரச்சினை உள்ளது என நாம் கண்டறிந்தால்தான் அதை நாம் முறியடிக்க முயற்சிப்போம்.

The post கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா appeared first on Dinakaran.

Tags : Professor of Medicine ,Muthiah ,Dinakaran ,
× RELATED சிறுமி கர்ப்பம் வாலிபர் கைது