×

புதுச்சேரியில் முதியவரிடம் வைரம் ஆசை காட்டி தங்கத்தை பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்

புதுச்சேரி: புதுச்சேரி: புதுச்சேரியில் போலி வைரம் கொடுத்து முதியவரை ஏமாற்றி 4 சவரன் நகையை அபகரித்து சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, அம்பலத்தாடையர் மடத்து வீதியை சேர்ந்தவர் கஸ்துாரி,74; இவர் கடந்த 20ம் தேதி தியாக முதலியார் வீதி வழியாக நடந்து சென்றார். அவ்வழியாக வந்த மர்ம நபர்கள், அவரிடம் பேசி, ‘நாங்கள் இலங்கையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு வைர கற்களை கொண்டு செல்கிறோம். உங்களுக்கு வேண்டும் என்றால், வாங்கி கொள்ளுங்கள், என ஆசை வார்த்தை கூறினர்.

அதை நம்பி வைர கற்களை வாங்கிக் கொண்ட அவர், தான் அணிந்திருந்த 3 சவரன் செயின்,ஒரு சவரன் மோதிரம் ஆகியவற்றை மர்ம நபர்களிடம் கொடுத்தார். பின், மீதி பணம் எடுத்துவர கஸ்துாரி, வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்தவர்களிடம், அவர், வைர கற்களை காண்பித்தபோது, அது போலி வைரம் என தெரியவந்தது. முதியவருடன், வீட்டில் இருந்தவர்கள், போலி வைரம் கொடுத்த நபர்கள் தேடி சென்றபோது, அவர்களை காணவில்லை.

இதுகுறித்து, கஸ்துாரி கொடுத்து புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து, மோசடி நபர்களை சப் இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், கஸ்துாரியிடம் வாங்கிய நகைகளை விற்க நேற்று புதுச்சேரியில் உள்ள நகை கடைக்கு வந்த நபர்களை, போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள், வேலுார் ராஜ்குமார், சதீஷ், 36, நளமுகமது,66 ஜெயவேலு,38 ஜமால் நாசர் 65, என்பதும், காஸ்துாரியிடம் நகையை அபகரித்ததும், இவர்கள் மீது வேலுார் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. அதன்பேரில், அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள நகைகளை மீட்டனர். பின்னர் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post புதுச்சேரியில் முதியவரிடம் வைரம் ஆசை காட்டி தங்கத்தை பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Kasthuri ,Ambalathadayar ,Mathu Veedhi ,Tyaga Mudaliyar ,
× RELATED புதுச்சேரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை