×

இஸ்லாமிய வாழ்வியல்: ஒற்றுமையால் உண்டு நன்மை..!

இஸ்லாமிய வாழ்வியல்

ஒற்றுமையின் வலிமையைப் பள்ளிப் பாடங்களிலேயே நாம் நிறைய படித்துள்ளோம். பஞ்சதந்திரக் கதைகளில் பலவும் சமயோசித புத்தியையும், ஒற்றுமையையும் வலியுறுத்தும் கதைகள்தான். மரணப் படுக்கையில் இருந்த ஒரு தந்தை, சதா சண்டையிட்டுக் கொண்டிருந்த மூன்று மகன்களையும் அழைத்தார். ஒற்றுமையின் வலிமையை அவர்களுக்கு உணர்த்துவதற்காக ஒரு தந்திரம் செய்தார்.

காய்ந்த சுள்ளிக் குச்சிகளைப் பொறுக்கி வரச் சொல்லி ஒவ்வொன்றாக உடைக்கச் சொன்னார். மகன்கள் பட்பட்டென்று உடைத்துக் காட்டினர். பிறகு எல்லாச் சுள்ளிகளையும் ஒரே கட்டாக இறுகக் கட்டி “இப்போது உடையுங்கள்” என்றார். மூன்று பிள்ளைகளும் எவ்வளவோ முயன்றும் அந்தச் சுள்ளிக் கட்டை உடைக்க முடியவில்லை. இதன் மூலம் ஒற்றுமையின் வலிமையைத் தந்தை மகன்களுக்கு உணர்த்தினார்.

இஸ்லாமியத் திருநெறி மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் – தந்தையின் பிள்ளைகளே என்றுகூறி சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் அழுத்தமாகப் பின்பற்றும்படிச் சொல்கிறது. மனிதர்களிடையே பல்வேறு நிறங்களும், மொழிகளும், குலங்களும், கோத்திரங்களும் காணப்படுகின்றன அல்லவா? இவையெல்லாம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்வதற்குத்தானே தவிர, ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதற்கல்ல என்று குர்ஆன் குறிப்பிடுகிறது.

“மனிதர்களே, நாம் உங்களை ஓர் ஆண் – பெண்ணிலிருந்து படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு, உங்களைச் சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்.” (குர்ஆன் 49:13)

“ஒற்றுமையுடன் இணங்கி வாழும் கூட்டத்தார் மீது இறைவனின் அருள் இறங்குகிறது” என்பது நபிமொழியாகும். இரண்டு மனிதர்களிடையே அல்லது இரண்டு கூட்டத்தாரிடையே ஒற்றுமையையும், சமாதானத்தையும் மலரச் செய்வதற்காக, தேவைப்பட்டால் பொய்கூட கூறலாம் என்று அண்ணல் நபி (ஸல்) அருளியுள்ளார். “பொய்மையும் வாய்மையிடத்து” எனும் வள்ளுவரின் வாக்கும் இங்கு நினைவுகூரத்தக்கது. ஒருமுறை, மக்காவிலிருந்து புலம் பெயர்ந்து வந்து, மதீனாவில் குடியேறிய தோழர்களுக்கும், மதீனாவையே தாயகமாய்க் கொண்ட தோழர்களுக்கும் இடையில், ஏதோ ஒரு பிரச்னையில் மோதல் ஏற்பட்டது.

“ஓ… மக்காவாசிகளே….” என்று புலம் பெயர்ந்தவர்களும், “ஓ… மதீனாவாசிகளே….” என்று இவர்களும் தம்தம் இனத்தாரைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு குழு மோதலுக்குத் தயாரானார்கள். அப்போது நபியவர்கள், இரு தரப்பினரையும் அழைத்து வன்மையாகக் கண்டித்து அவர்களிடையே ஒற்றுமையையும் சமாதானத்தையும் ஏற்படுத்தினார்.

`ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே
விளையும் தீமையே.’

– சிராஜுல்ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

“நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இறைவனின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்துவிடாதீர்கள்.” (குர்ஆன் 3:103)

The post இஸ்லாமிய வாழ்வியல்: ஒற்றுமையால் உண்டு நன்மை..! appeared first on Dinakaran.

Tags :
× RELATED கன்னியா ராசி முதலாளி மற்றும் தொழிலாளி