×

நெருங்குது கோடை சீசன் பழநி- கொடைக்கானல் சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பழநி: கோடை சீசன் நெருங்கி வரும் நிலையில் பழநி- கொடைக்கானல் சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநியில் இருந்து தெற்கே 60 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது கொடைக்கானல். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற இடமாக இருப்பதால் எப்போதும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி கொண்டே இருக்கும். கோடை விடுமுறை காலங்களான ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் மாதம் வரை தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் வத்தலக்குண்டு வழி சாலை, பழநி வழி சாலையில் செல்வது வழக்கம். பழநியில் முருகன் கோயில் இருப்பதால் பெரும்பாலானோர் கோயிலுக்கு சென்று விட்டு போவதற்காக பழநி சாலையையே பயன்படுத்துவது வழக்கம். இதனால் இச்சாலையில் இரவில் கூட போக்குவரத்து இருக்கும். இந்த ஆண்டு கொடைக்கானலுக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மார்ச் மாத இறுதி முதல் கொடைக்கானலில் கோடை சீசன் துவங்கி விடும். ஆண்டுதோறும் கோடை சீசன் காலங்களில் பழநி- கொடைக்கானல் சாலையில் ஏராளமான விபத்துகள் நடப்பது வழக்கம். எனவே, அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி- கொடைக்கானல் சாலையில் உள்ள வளைவுகளில் எதிரொலிக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டுவது, சாலையோரங்களில் தடுப்புகள் அமைப்பது போன்ற பணிகளை சீசன் துவங்குவதற்கு முன்பே மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பழநி- கொடைக்கானல் சாலையில் சவரிக்காடு, மேல்பள்ளம் பகுதிகளில் தான் அதிகளவு விபத்துக்கள் நடக்கிறது.

இந்த 2 ஊர்களுக்கும் நடுவில் அமைந்துள்ள இப்பகுதிக்கு மீட்பு வாகனங்கள் வருவதற்கே சுமார் 2 மணிநேரமாகி விடுகிறது. இந்த தாமதம் தான் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாகிறது. இதனை தவிர்க்க சீசன் முடியும் இப்பகுதியில் தற்காலிக முதலுதவி மையமும் மற்றும் மீட்பு மையம் ஏற்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி விபத்துக்களை தவிர்க்க இச்சாலையில் இரவுநேர வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நெருங்குது கோடை சீசன் பழநி- கொடைக்கானல் சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani- Kodaikanal road ,Palani ,Palani-Kodaikanal road ,Western Ghats… ,Dinakaran ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது