×

கோடை இருள் இருளர்களின் வாழ்வியல்

நன்றி குங்குமம் தோழி

பழங்குடி மக்களின் வாழ்வியலை பல படங்கள் பதிவு செய்திருக்கின்றன. ஆனால் அதிலிருந்து மாறுபட்டிருக்கிறது ‘கோடை இருள்’ என்ற படம். சமவெளி இருளர் பழங்குடி மக்களின் வாழ்வியலை, பண்பாட்டு விழுமியங்களை, அந்த மக்களின் வாழ்க்கையின் மீதான பிடிப்பை, அறத்தை அப்படியே பதிவு செய்திருக்கிறது கோடை இருள். இதை எழுதி படமாக்கியிருக்கிறார் இயக்குநர் குட்டி ரேவதி. சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றிருக்கிறது.

பழங்குடிகள் மீது நிகழ்த்தப்படும் உழைப்பு சுரண்டல், சமமாக இருவரும் வேலைக்கு போவது, இருளப் பெண்களின் பாம்பு பிடிக்கும் நுட்பம் என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறது இந்த கோடை இருள். இந்த படம் எடுக்கப்பட்ட நோக்கம் குறித்து இயக்குநர் குட்டி ரேவதியிடம் பேசும் போது, ‘‘சொந்த ஊரு திருச்சி. சித்தமருத்துவம் படிச்சிட்டு வேலை செய்திட்டு இருந்தேன். எனக்கு எழுத்துகள் மீது ஆர்வம் அதிகம். கவிதைகள், கட்டுரைகள் வழியாக என்னை நான் வெளிக்கொண்டு வந்தேன். என்னுடைய எழுத்துகள் பரவலாக வாசிக்கப்பட்டது. ‘மரியான்’ படம் மூலமாதான் ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு அறிமுகமானார்.

அந்த படத்தில் நான் நெஞ்சே எழு, எங்கே போன மரியான் போன்ற பாடல்கள் மூலமாக பாடலாசிரியரானேன். அதில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினேன். கொரோனா சமயத்தில் ‘சிறகு’ என்ற படத்தை இயக்க திட்டமிட்டு அன்றிருந்த சூழ்நிலை காரணமாக தொடர முடியாமல் போனது. அதன் பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் ஃபவுண்டேஷன் சார்பில் நடத்தப்பட்ட குறும்பட போட்டியில் கலந்து கொண்டு பரிசு வென்றேன். இப்படித்தான் என்னுடைய திரைத்துறைப் பயணம் தொடர்ந்தது.

நான் பூட்டிய அறைக்குள் எழுதும் எழுத்தாளர் இல்லை. நான் பார்த்த காட்சிகள், மற்றவர்களிடம் உரையாடிய விஷயங்கள்தான் என் எழுத்துகளில் பிரதிபலிக்கின்றன. நான் நிறைய பயணங்களில் ஈடுபடுவேன். அதுதான் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்று கொண்டிருக்கிறது. ஒரு பயணத்தின் போதுதான் அய்யா கல்யாணி அவர்களை சந்தித்தேன். இருளர் பழங்குடி பாதுகாப்பு சங்கம் ஒன்றை ஆரம்பித்து, பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். அவருடைய அறிமுகத்தில் நான் இருளர் பழங்குடி மக்கள் வாழக்கூடிய பகுதிகளுக்கு சென்று அந்த மக்களுடன் தங்கி அவர்களுடனேயே வாழ தொடங்கினேன்.

இருளர் பழங்குடி மக்கள் பாம்பு பிடிப்பவர்களாக இருக்கிறார்கள். வயல் ஓரங்களில் எலிகள் தொல்லை அதிகம் இருப்பதால், அதை அழிக்க இவர்கள் பாம்புகளை பயன்படுத்திக் கொண்டனர். பாம்புகள் பிடிப்பதிலும் இருளர் பெண்கள்தான் திறமையானவர்கள். ரோமுலஸ் விக்டேகர், பாம்பு பிடிப்பவர். இவர் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இவர்களின் பாம்பு பிடிக்கும் திறமையை பார்த்து வியந்தவர், இங்கு தங்கி இவர்களைப் பற்றி ஆய்வு செய்தார். பாம்பு பிடிக்கும் போது எந்த வித பாதுகாப்பும் இவர்களுக்கு இல்லை என்பதால் பாம்பின் விஷத்திலிருந்து மருந்துகளை தயாரிக்கும் கோஆப்ரேட்டிவ் சொசைட்டி ஒன்றை முட்டுக்காட்டில் தொடங்கினார்.

இவர்கள் பாம்புகளை பிடித்து வந்து, இங்கு விஷம் எடுத்தவுடன் திரும்பவும் பிடித்த இடத்தில் விட்டு விடுவார்கள். இதற்காக அவர்களுக்கு சம்பளமும் கிடைத்தது. இதற்கு முன்பு ஜெர்மனியர்கள் இவர்களைக் கொண்டு பாம்புகளின் தோலில் இருந்து பெல்ட், பர்ஸ், பேக் போன்றவற்றை தயாரித்தனர். இன்றுவரை இவர்களின் திறமை மற்றவர்களின் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடுமையான உழைப்பாளிகளான இவர்கள் மீது, பொய் வழக்குகளும் அவ்வப்போது போடப்படுகிறது.

இவர்கள் வாங்கிய சொர்ப்ப கடனுக்காக இவர்கள் வாழ்க்கை முழுதும் கொத்தடிமைகளாக செங்கல் சூளை, அரிசி மில், கரிசூளையில் வேலை செய்ய வைத்தனர். கொத்தடிமையை ஒழிக்க சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டாலும், குறைவான சம்பளம் பெற்றுக் கொண்டு கொத்தடிமைகளாகத்தான் இவர்கள் இருக்கிறார்கள். இதை எதிர்த்து போராடி கல்யாணசுந்தரம் அய்யா பலருக்கு நீதியை பெற்றுத் தந்தார். இவருடைய முயற்சியால் பல மக்களும் சுயமரியாதையோடு வாழ கற்றுக் கொண்டனர்.

பழங்குடிகளின் வாழ்க்கை வறுமையால் சூழப்பட்டிருந்தாலும், அவர்கள் தங்களின் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் வணங்கும் ஏழு கன்னிமார் கடவுள்களுக்கு வருடா வருடம் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறும். அன்று சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து இருளர்களும் கலந்து கொண்டு மகிழ்வார்கள். இவற்றையெல்லாம் பார்த்துதான் நான் இதை படமாக்க முடிவு செய்தேன்.

முக்கியமாக உலக திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப வேண்டும் என்று தீர்மானித்தேன். இவர்களின் வாழ்வியலை அப்படியே பதிவு செய்ய வணிக திரைப்படங்கள் இடம் கொடுக்காது. காரணம், கொஞ்சம் கமர்ஷியலா போனாலும் என்னால் அவர்களின் சமூகத்திற்கு ஜஸ்டிஃபை செய்ய முடியாது. அவர்களுடைய வாழ்க்கையின் அறத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதில் மட்டும் நான் சமரசம் செய்யக்கூடாது என்று உறுதியாக இருந்தேன். இதனால் நானும் ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்களும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டோம்’’ என்றவர் இந்த படத்தைப் பற்றி பேசத் தொடங்கினார்.

‘‘சிவப்பி என்ற பெண் கதாபாத்திரத்தின் வழியாகத்தான் படம் முழுதும் நகரும். பழங்குடி சமூகத்தில் பெண்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. இங்கு ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை சம்பாதித்துக் கொள்கிறார்கள். பெண்கள் ஆண்களை சார்ந்து இங்கில்லை. பெண்கள் நினைத்ததை செய்து கொள்வதற்கான வழியினை இவர்களின் சமூகம் அவர்களுக்கு கொடுத்துள்ளது. மற்றவர்களால் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு கூட்டுக்குள் முடங்காமல், தைரியமாக தங்கள் வலியை சமூகத்தின் முன் வைக்கிறார்கள். இதன் மூலம் அந்த வலி மற்றொரு பெண்ணையும் பாதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

ஆனால் நம்முடைய குடும்ப அமைப்புகள் போலியானவை. பெண்களின் நீதிகளை பொருட்படுத்தாது அவர்கள் மீது நடக்கும் பாலியல் வல்லுறவுகளை குடும்பத்தின் அவமானம் என்று பார்க்கிறது. குலம் மற்றும் சாதி போன்ற போலியான பெருமைகளில்தான் நம்முடைய குடும்ப அமைப்பு இயங்குகிறது. ஆனால் அந்த கட்டுப்பாட்டினை உடைத்து அவர்களுக்கு நடந்த அநீதியை வெளியில் சொல்கிறார்கள். இந்த வலிமையை நாம் அந்த சமூகத்தினரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்த கருத்தைதான் நான் சிவப்பி கதாபாத்திரத்தின் வழியாக சொல்லியிருக்கிறேன். அந்த மக்களின் உணர்ச்சிகளை நுட்பமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதால், ருக்குமணி என்கிற நாடக கலைஞரை சிவப்பி கதாபாத்திரத்திலும், இளமாறன் என்பவரை கதையின் நாயகராக நடிக்க வைத்திருக்கிறேன்.

படத்திற்கு கோடை இருள் என்று பெயர் வைக்க காரணம், வட தமிழ்நாடு முழுதும் கோடை காரணமாக வறட்சி அதிகமாக இருக்கும். மேலும் இவர்களின் வாழ்க்கையும் இருளடைந்து இருப்பதாலும், இருளர் என்ற சொல் வருவதாலும் படத்திற்கு இந்த படத்தின் தலைப்பினை வைத்தோம். சென்னை திரைப்பட விழாவில் இருளர் மக்களை அழைத்து சென்று அவர்களுடைய வாழ்க்கையை படமாக காட்டிய போது அனைவரும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவிக் கொண்டனர். இருளர் வாழ்க்கையை அப்படியே படமாக்கியிருக்கிறாய் என்று பேராசிரியர் கல்யாணி அய்யா சொன்ன போது, இந்த படம் முழுமையடைந்ததாக உணர்ந்தேன். மேலும் அனைத்து இருளர் பழங்குடி குடியிருப்புகளிலும் இந்த படத்தை திரையிட முடிவு செய்திருக்கிறோம்’’ என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் படத்தின் இயக்குநர் குட்டி ரேவதி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post கோடை இருள் இருளர்களின் வாழ்வியல் appeared first on Dinakaran.

Tags : Kumkum Dodhi ,
× RELATED புளிய மரங்கள் சொல்லும் கதை!