×

பாலாற்றில் ₹90 கோடியில் மேம்பாலத்துடன் சாலை பணிகள் தொடங்கியது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே படம் உள்ளது…

 

வேலூர், பிப்.2: சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே பாலாற்றில் ₹90 கோடியில் கட்டப்படும் மேம்பாலத்துடன் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், வருங்கால வைப்புநிதி அலுவலகம், வனத்துைற, நீதிமன்றம், வட்டார போக்குவரத்து அலுவலகம், ஆவின் அலுவலகம் போன்ற முக்கிய அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அதேபோல், காட்பாடியில் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வரக்கூடிய வகையில் ரயில் நிலையம், விஐடி பல்கலைக்கழகம், மாவட்ட விளையாட்டு மைதானம், முன்னாள் ராணுவவீரர் நல மருத்துவமனை மற்றும் கேன்டீன் போன்றவை இயங்கி வருகின்றன. இந்த 2 பகுதிகளுக்கும் சென்று வருவதற்கு பிரம்மபுரத்தை சேர்ந்தவர்களும் சத்துவாச்சாரியை சேர்ந்தவர்களும் சுமார் 8 கி.மீ தூரம் சுற்றி வர வேண்டும். ஆனால், பாலாற்றின் இடையே பாலம் அமைக்கப்பட்டால், ஒரு கி.மீ தூரத்தில் பாலத்தை கடந்து எளிதாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லும் வகையில், கடந்த 2011ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் சத்துவாச்சாரி- காங்கேயநல்லூர் இடையே பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றத்தால், கிடப்பில் போடப்பட்டது. சத்துவாச்சாரி காவல் நிலையம் அருகே போக்குவரத்து பணிமனைக்கு எதிரே உள்ள காலி இடத்திலிருந்து தொடங்கி காட்பாடி அருகே பிரம்மபுரத்தில் முடியும் வகையில் அறிவிக்கப்பட்ட, சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே புதிய பாலம் அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்க ேகாரிக்கை எழுந்து வந்தது. பாலம் அமைக்க தாமதமானதால், மழைநீர், கழிவுநீர் இணைந்து செல்லும் கருநிற கழிவுநீரில் இறங்கி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை தொடர்ந்து வருகிறது.

எனவே, பொதுமக்கள் பாலம் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் சத்துச்சாரி- பிரம்மபுரம் மேம்பாலம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக ₹90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாலாற்றின் குறுக்கே இணைப்புசாலை அமைக்க சத்துவாச்சாரி பகுதியில் 32,775 சதுரமீட்டருக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதேபோல், பிரம்மபுரத்தில் 38,000 சதுரமீட்டர் அளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இப்பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு இழப்பீடு தொகையாக சுமார் ₹7 கோடி வரையில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து டெண்டர் எடுத்தவர் சமர்ப்பித்த ஆவணங்கள் சரியில்லை எனக்கூறி சென்னையில் உள்ள நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள் சத்துவாச்சாரி- பிரம்மபுரம் மேம்பால டெண்டர் ரத்து செய்யப்பட்டதாகவும், மீண்டும் டெண்டர் விட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சில வாரங்களுக்கு முன்பு தினகரன் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது. இதையடுத்து, சத்துவாச்சாரி- பிரம்மபுரத்திற்கு இடையே மேம்பாலம் பணிகளுக்காக மறுடெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மேம்பாலம் கட்டும் பணியை திருச்சியை சேர்ந்த தனியார் நிறுவனம் எடுத்துள்ளதாகவும், தற்போது, மேம்பாலம் அமைய உள்ள இடத்தில் மரங்கள் மற்றும் முட்புதர்களை அகற்றும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதோடு ரங்காபுரம் அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் எதிரே இருந்து பாலாற்றில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ள இடம் வரை சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. மேம்பாலத்திற்கான பூமி பூஜை விரைவில் போட்டு கட்டுமான பணிகள் தொடங்கும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சத்துவாச்சாரி- பிரம்மபுரம் மேம்பால பணிகள் தொடங்கி உள்ளதால், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது.

The post பாலாற்றில் ₹90 கோடியில் மேம்பாலத்துடன் சாலை பணிகள் தொடங்கியது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது சத்துவாச்சாரி- பிரம்மபுரம் இடையே படம் உள்ளது… appeared first on Dinakaran.

Tags : Palar ,Sathuvachari ,Brahmapuram ,Vellore ,Sathuvachari- ,Bala ,Vellore Sathuvachari ,Palaur ,-Brahmapuram ,Dinakaran ,
× RELATED மீனவர்களை கொன்ற போது வேடிக்கை...