×

செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை சுற்றிலும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

குன்றத்தூர், பிப்.2: செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. மழைக்காலங்களில் சென்னை புறநகர் பகுதிகளில் பெய்யும் மழைநீரை இங்கு சேமித்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, இந்த ஏரிக்கரையில் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து புதர்போல் காணப்படுகிறது.

பொதுவாக சீமைக்கருவேல மரங்கள் நிலத்தில் உள்ள நீரை மட்டுமின்றி, காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சும் தன்மை கொண்டவை. அத்துடன் அதிகளவில் கரியமில வாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டவை. அதனாலேயே அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் தற்போதும் சீமைக்கருவேல மரங்கள் வளர தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்ற கடந்த சில வருடங்களுக்கு முன் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தமிழக அரசும் சீமைக்கருவேல மரங்களின் தீமைகள் குறித்து பல்வேறு வகைகளில் எச்சரித்து, அதனை அகற்ற அறிவுரை வழங்கியது. இருந்த போதிலும், இன்னும் பெரும்பாலான இடங்களிலும், சாலையோரங்களிலும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களால் நிலத்தடி நீர் வற்றி, அப்பகுதி மண் மலடாகும் சூழ்நிலை உள்ளது. எனவே, இதனை கருத்தில் கொண்டு செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் பரவலாக வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்றி விட்டு, ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை சுற்றிலும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam lakeshore ,Kunradthur ,Chembarambakkam lake ,Chennai ,Sembarambakkam ,Simai ,Dinakaran ,
× RELATED ஜெனரேட்டர் பழுது காரணமாக சீமான்...