×

ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வணிகர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது: பேரமைப்பு கடும் கண்டனம்

சென்னை: ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், வணிகர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அறிவிக்க இருந்த ஒன்றிய அரசின் பட்ஜெட் மீது அகில இந்திய அளவில் குறிப்பாக, வணிகர்கள் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்புகளோடு காத்திருந்தார்கள்.

உதாரணமாக ஒரே நாடு ஒரே வரி, ஒரே தேர்தல் என்ற பிரதமரின் ஒற்றை மந்திர முழக்கத்தின் அடிப்படையில், ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மாதாந்திர வருவாய் ஏரத்தாழ 1.73 லட்சம் கோடியை தொட்டிருக்கின்ற நிலையில், ஜி.எஸ்.டி வரியில் உள்ள பல நிலைகளை ஒருங்கிணைத்து ஒரேவரி அறிவிப்பு வெளிவரும் என்கிற மிகப்பெரும் எதிர்பார்ப்பு வணிகர்களிடம் இருந்து வந்தது. ஜி.எஸ்.டி வரியில் உள்ள மொத்த குளறுபடிகளையும் இந்த பட்ஜெட் அறிவிப்பு களைந்திடுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை நிதி அமைச்சரின் இன்றைய பட்ஜெட் அறிவிப்பு வணிகர்களின் எதிர்பார்ப்புகளை பொய்த்துபோகச் செய்திருக்கிறது.

எவ்வித மாற்றமும் இன்றி நேர்முக, மறைமுக வருவாயை அப்படியோ இருந்த நிலையிலேயே அறிவித்திருப்பதும் ஏற்கத்தக்கதாக இல்லை. குறிப்பாக, தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு 10 லட்சம் ரூபாய் வரை விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டிருப்பது, நடுத்தர மக்களிடையே மிகப்பெரும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. புதிய தொழில் தொடங்குவோருக்கு 1 லட்சம் கோடி மதிப்புடன் கூடிய நிதியம் அமைப்பதாக அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. அதை போலவே வீடுகளில் சோலார் அமைத்தால் 300 யூனிட் அளவிற்கு மின்சாரம் இலவசம் என்று அறிவித்திருப்பது அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனுள்ள ஒரு அறிவிப்பு.

இதர வகைகளில் அதாவது வந்தே பாரத் ரயில்கள், விமான நிலையங்கள் எண்ணிக்கை அதிகப்படுத்துவது போன்ற வளர்ச்சிக்கான அறிவிப்பாக இந்த பட்ஜெட் இருந்தாலும், கூடுதல் விவரங்கள் அறிவித்த பின்னரே பட்ஜெட் குறித்த வரவேற்பு மக்களிடையே எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்துகொள்ள இயலும். எப்படி இருப்பினும், அரசின் வரி வருவாய்க்கு வழிவகுக்கும் வணிகர்களின் நிலைப்பாடறிந்து, அடுத்து அறிவிக்க இருக்கும் பட்ஜெட் அறிவிப்பில், எளிய வரி வருவாயை பின்பற்றி, எளியோர்களின் குரல் ஏற்கப்படவேண்டும் என்பதுதான் பேரமைப்பின் குறிக்கோளாகும். மொத்தத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட் வணிகர்களின் எதிர்பார்ப்பை பொய்த்துப் போகச் செய்திருக்கிறது என்பதே உண்மை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வணிகர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது: பேரமைப்பு கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Federation ,CHENNAI ,Federation of Merchants' Associations ,Federation of Tamil Nadu Merchants' Associations ,General Secretary ,Govindarajulu ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்