×

பெரியார் பல்கலை.யில் ரூ.6 கோடி முறைகேடு அம்பலம்: உள்ளாட்சி நிதி தணிக்கை அதிகாரிகள் நடத்திய 9 நாள் ஆய்வில் அதிர்ச்சி

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 9 நாட்களாக நடந்த உள்ளாட்சி நிதி தணிக்கை குழு ஆய்வில் ரூ.6 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட 4 பேர், பூட்டர் பவுண்டேசன் என்ற நிறுவனத்தை பல்கலைக்கழகத்தில் துவங்கினர். லாப நோக்கத்துடன் இவர்களின் ஓய்வுக்கு பிறகு வருவாய் ஈட்டும் வகையில் துவங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரின்பேரில், துணைவேந்தர் ெஜகநாதன் உள்பட 4 பேர் மீது கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் வழக்கு பதிவான நிலையில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். உடனடியாக அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்தநிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு முதல் நடந்துள்ள பண பரிவர்த்தனைகள் ெதாடர்பாகவும், பூட்டர் பவுன்டேசன் நிறுவனத்திற்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதா? என்பதை கண்டுபிடிக்கும் வகையிலும் உள்ளாட்சி நிதி தணிக்கை குழு துணை இயக்குனர் நீலாவதி தலைமையிலான குழுவினர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். இது9 வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ஒன்றிய அரசின் தீனதயாள் உபாத்யாயா திட்டத்தின் கீழ் பட்டியலின மாணவர்களுக்கு முறையாக பணச்சலுகை வழங்கப்பட்டுள்ளதா? ஒன்றிய, மாநில அரசுகளின் நிதியும் முறையாக செலவு செய்துள்ளனரா? எனவும் தணிக்கை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் இந்த ஆய்வில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பல்கலைக்கழகத்திற்கு சாப்ட்வேர் வாங்கியது, கம்ப்யூட்டர்கள் வாங்கியது, மற்றும் பல்கலைக்கழக அலுவலக கட்டிடங்கள் பராமரித்தல் உள்ளிட்ட செலவுகளில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் சுமார் ரூ.6 கோடி அளவில் இந்த முறைகேடுகள் நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. ஒன்றிய அரசின் தீனதயாள் உபாத்யாயா திட்டத்தின் கீழ் பழங்குடியின மாணவர்களுக்கான நிதி ரூ.2 கோடியே 55 லட்சத்திற்கு மேல் பயன்படுத்தாமல் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தணிக்கையின் ஆய்வு அறிக்கை அரசுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு நடவடிக்கை பாயும் என தெரிகிறது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post பெரியார் பல்கலை.யில் ரூ.6 கோடி முறைகேடு அம்பலம்: உள்ளாட்சி நிதி தணிக்கை அதிகாரிகள் நடத்திய 9 நாள் ஆய்வில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Periyar ,University ,Local Government Financial Audit ,Salem ,Local Government Finance Audit Committee ,Salem Periyar University ,Vice-Chancellor ,Jaganathan ,Registrar ,Thangavel ,Periyar University ,Dinakaran ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...