×

பேஸ்புக், இன்ஸ்டா-வில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதற்காக பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் மன்னிப்பு கோரினார் மார்க் ஜூக்கர்பர்க்

வாஷிங்டன் : முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதற்காக பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் மன்னிப்பு கோரினார். அமெரிக்காவின் சமூக வலைத்தளங்கள் மூலம் பெண் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுவது பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது. கடந்த ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் அதிகரிக்கவே மெட்டா உள்ளிட்ட முன்னணி சமூக வலைத்தளங்கள் மீது பல்வேறு மாகாணங்களில் வழக்குப் பதிவானது. இந்த நிலையில் நேற்று அமெரிக்க செனட் சபையில் குழந்தைகளின் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் மெட்டா, டிக் டாக், எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி வலைதள நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது, பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான காட்சி ஒளிபரப்பப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களின் குழந்தைகளின் நிலையை எடுத்துரைத்தனர். தொடர்ந்து வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தி வன்கொடுமையாளர்கள் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி நடவடிக்கை எடுக்க தவறியதற்காக நிறுவன அதிகாரிகளிடம் கேள்வி கேட்கப்பட்டது. மெட்டா நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்ட போது, திடீரென பாதிக்கப்பட்ட குடும்பங்களை நோக்கி திரும்பிய நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க், தனது நிறுவனத்தின் தவறுக்காக மன்னிப்பு கோரினார். கூட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக நிறுவனங்கள் தெரிவித்ததை தொடர்ந்து அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில், லாபம் ஈட்டும் நடவடிக்கைகளை இணையதளங்கள் மேற்கொள்ள அமெரிக்க செனட் சபை நீதிக்குழு அறிவுறுத்தியது.

The post பேஸ்புக், இன்ஸ்டா-வில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதற்காக பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் மன்னிப்பு கோரினார் மார்க் ஜூக்கர்பர்க் appeared first on Dinakaran.

Tags : Mark Zuckerberg ,Facebook ,Instagram ,WASHINGTON ,America ,Dinakaran ,
× RELATED இணையத்தில் மலர்ந்த காதல் 34 வயது பெண்ணை கரம்பிடித்த 80 வயது முதியவர்