×

பள்ளி தலைமை ஆசிரியரை பழிவாங்க குழந்தைகள் மூலம் பாலியல் சீண்டல் நடப்பதாக போலி வீடியோ வெளியிட்ட ஆசிரியை கைது: தோழிக்கு வலை

நெல்லை: பள்ளி தலைமை ஆசிரியையை பழிவாங்க பள்ளிக் குழந்தைகளை பாலியல் சீண்டல் என பேச வைத்து போலி வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள ஒரு அரசு துவக்கப்பள்ளியில் சுமார் 8 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பள்ளிக் குழந்தைகள், பள்ளியில் பாலியல் சீண்டல் நடந்ததாக பேசும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவில் பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருக்கும் குழந்தைகளிடம் ஒரு பெண் கேள்வி கேட்க, கேட்க அந்தக் குழந்தைகள் பதில் தெரிவிக்கின்றனர். இந்த வீடியோ வைரலானதால், காவல்துறையினர் மற்றும் தொடக்க கல்வித்துறையினர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் இப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியை ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததும், இதையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியை மீது அவதூறு மற்றும் பழிவாங்கும் நோக்கில் பள்ளி ஆசிரியை மற்றும் அவரது தோழியான பள்ளியில் படித்து வரும் ஒரு மாணவியின் தாய் ஆகிய இருவரும், பள்ளியில் படித்து வரும் மாணவிகளிடம் பாலியல் சீண்டல் நடந்தது போன்று சித்தரித்து வீடியோ பதிவிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆசிரியை மங்களம் (54) மற்றும் உடந்தையாக செயல்பட்ட அவரது தோழி அனுராதா (33) ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து ஆசிரியை மங்களத்தை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அனுராதாவை போலீசார் தேடி வருகின்றனர்.

The post பள்ளி தலைமை ஆசிரியரை பழிவாங்க குழந்தைகள் மூலம் பாலியல் சீண்டல் நடப்பதாக போலி வீடியோ வெளியிட்ட ஆசிரியை கைது: தோழிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Dodhiku Web ,Nellai ,Veeravanallur, Nellai ,Dodhiku Vela ,
× RELATED தமிழ்நாடு மக்கள் மீது நான்...