×

பொருளாதார சீர்திருத்தங்களால் நாடு சரியான திசையில் பயணிக்கிறது: நாடாளுமன்ற கூட்டத்தை தொடங்கிவைத்து ஜனாதிபதி உரை

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றி, பட்ஜெட் கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார். இதில், ஒன்றிய அரசின் பொருளாதார சீர்த்திருத்தங்களால் நாடு சரியான திசையில் பயணிப்பதாக தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றி கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார். இதில், ராமர் கோயில் முதல் நாட்டின் பாதுகாப்பு வரை கடந்த 10 ஆண்டு கால ஒன்றிய பாஜ அரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார். ஜனாதிபதி முர்மு தனது 75 நிமிட உரையில் கூறியதாவது: இந்த புதிய நாடாளுமன்றம் அமிர்த காலத்தின் தொடக்கத்தில் கட்டப்பட்டுள்ளது. இது, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற சாராம்சத்தையும், 21ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவின் புதிய மரபுகளை உருவாக்குவதற்கான உறுதியையும் கொண்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க உதவும் கொள்கைகள் பற்றிய பயனுள்ள விவாதங்கள் நடைபெறும் என நான் முழுமையாக உறுதி அளிக்கிறேன்.

இங்கு, 30 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடிக்கும், அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது பெண்கள் சக்தி மீது இந்த அரசு கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. அனைத்து துறையிலும் இன்று பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆயுதப் படைகளிலும் கூட பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. பெண்கள் இப்போது போர் விமானங்களை இயக்குகிறார்கள். கடற்படை கப்பல்களுக்கு கட்டளையிடுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில், பல தசாப்தங்களாக மக்கள் காத்திருந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த கால சவால்களைத் தோற்கடித்தால் மட்டுமே ஒரு நாடு வேகமாக முன்னேற முடியும். அந்த வகையில் பல்வேறு சவால்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளாக ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது. இன்று அது நிஜமாகிவிட்டது. அயோத்தியில் கடந்த 22ம் தேதி கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அடுத்த 5 நாளில் ராமர் கோயிலில் 13 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். முத்தலாக் முறைக்கு எதிராக கடுமையான சட்டத்தை அரசு உருவாக்கி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை நீக்கி வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இப்போது காஷ்மீரில் அமைதி மற்றும் பாதுகாப்பு சூழல் நிலவுகிறது. வடகிழக்கில் கிளர்ச்சி சம்பவங்கள் குறைந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் அரசு நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையை அனைத்து நிறுவனங்களின் முக்கிய அடித்தளமாக மாற்றியுள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்தில் பல சீர்திருத்தங்களால் இப்போது நாடு சரியான திசையிலும் சரியான வேகத்திலும் பயணிக்கிறது. ஜன்தன்-ஆதார்-மொபைல் என்ற மும்மூர்த்திகள் ஊழலைக் கட்டுப்படுத்த உதவியுள்ளன. நேரடி பணப்பரிமாற்றம் மூலம் இதுவரை அரசு மானியமாக ரூ.34 லட்சம் கோடி வழங்கியுள்ளது. இதில் சுமார் 10 கோடி போலி பயனாளிகள் களையெடுக்கப்பட்டு, ரூ. 2.75 லட்சம் கோடி தவறான கைகளுக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், அதற்கான சூழலை உருவாக்குவதற்கும் அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. குறு, சிறு தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கு அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா பலவீனமான 5 பொருளாதார நாடுகளில் இருந்து வலுவான பொருளாதாரம் கொண்ட முதல் 5 நாடுகளில் ஒன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்து 4 சதவீதத்துக்கும் கீழ் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 3.25 கோடியில் இருந்து 8.25 கோடியாக அதிகரித்துள்ளது. டிசம்பர் 2017ல், 98 லட்சம் பேர் ஜிஎஸ்டி செலுத்திய நிலையில் இன்று அதன் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சமாக உள்ளது. 2014க்கு முந்தைய 10 ஆண்டுகளில் சுமார் 13 கோடி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளில், 21 கோடிக்கும் அதிகமான வாகனங்களை மக்கள் வாங்கி உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகள் கோதுமை, நெல் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக சுமார் ரூ.18 லட்சம் கோடி பெற்றுள்ளனர். இது 2014க்கு முந்தைய 10 ஆண்டுகளை விட 2.5 மடங்கு அதிகமாகும். சுகாதாரத் துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக 16 எய்ம்ஸ் மற்றும் 315 மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம், எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு இடங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக நமோ பாரத், அம்ரித் பாரத் மற்றும் வந்தே பாரத் போன்ற செமி ஹை ஸ்பீடு ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன. இன்று வந்தே பாரத் ரயில்கள் 39க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்பதில் இந்தியா இன்று முன்னணியில் இருக்கிறது. இந்தியாவை உலகின் நண்பனாக மற்ற நாடுகள் பார்க்கின்றன. தீவிரவாதத்திற்கு இந்தியாவின் ஆயுதப் படைகள் தகுந்த பதிலடி கொடுக்கின்றன. விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், தேஜஸ் போர் விமானம், சி-295 சரக்கு போக்குவரத்து விமானம், நவீன விமான இன்ஜின்கள் இன்று உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. எல்லையை ஒட்டிய கிராமங்கள் நாட்டின் கடைசி கிராமங்களாக பார்க்கப்பட்டன. அவை இன்று நாட்டின் முதல் கிராமங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த கிராமங்களை மேம்படுத்தும் வகையில், துடிப்பான கிராமம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் நலனில் அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக ஆயிரக்கணக்கான பழங்குடியின கிராமங்கள் மின்சாரம், குழாய் நீர் விநியோகம், சாலை இணைப்பை பெற்றுள்ளன. அரசின் முயற்சியால் நாட்டில் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது. உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. பட்டியல் இன மாணவர்களின் சேர்க்கை 44 சதவீதமும், பழங்குடியின மாணவர்களின் சேர்க்கை 65 சதவீதமும் அதிகரித்துள்ளது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் நியாயமான வாய்ப்புகளை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு பலன்கள் நீட்டிக்கப்படுவது அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். இவ்வாறு ஜனாதிபதி முர்மு பேசினார். ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து இரு அவைகளும் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டன.

* முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்வோம்

கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் அளித்த பேட்டியில், ‘‘ஜனாதிபதி முர்மு உரையாற்ற உள்ளார். அதைத் தொடர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இது மகளிருக்கு அதிகாரமளித்தலின் கொண்டாட்டம். ஜனநாயகத்தில் விமர்சனமும் எதிர்ப்பும் அவசியம். ஆனால் ஆக்கபூர்வமான கருத்துகளால் அவையை வளப்படுத்தியவர்கள்தான் நினைவில் கொள்ளப்படுகிறார்கள். எனவே அவைக்கு இடையூறு செய்பவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வழக்கமாக, தேர்தல் நேரம் நெருங்கும்போது, முழு பட்ஜெட் சமர்ப்பிக்கப்படாது. அதே பாரம்பரியத்தை பின்பற்றி நாங்களும் புதிய அரசு அமைக்கப்பட்ட பின்னர் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வோம். அனைவரையும் உள்ளடக்கிய, வளர்ச்சிக்கான இந்தியாவின் பயணம் தொடரும்’’ என்றார்.

* செங்கோல் ஆசியுடன் தொடங்கிய கூட்டம்

பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்ற வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முடன் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வந்தனர். அப்போது புதிய நடைமுறையாக, நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட சோழர் காலத்து செங்கோல் ஏந்தப்பட்ட நிலையில் அதைத் தொடர்ந்து ஜனாதிபதி அவைக்குள் அழைத்து வரப்பட்டார். ஜனாதிபதி இருக்கைக்கு முன்பாக செங்கோல் நிறுவப்பட்டது. அப்போது அவையில் இருந்து எம்பிக்கள் பாரத் மாதா கி ஜெய், ஜெய் ராம், ஜெய் சியா ராம் என கோஷமிட்டனர். ஜனாதிபதி உரை நிகழ்த்திய போது முன் வரிசையில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், நிதின் கட்கரி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, காங். நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

The post பொருளாதார சீர்திருத்தங்களால் நாடு சரியான திசையில் பயணிக்கிறது: நாடாளுமன்ற கூட்டத்தை தொடங்கிவைத்து ஜனாதிபதி உரை appeared first on Dinakaran.

Tags : session ,New Delhi ,President ,Drabupati Murmu ,Parliament ,Union Government ,
× RELATED பொய், வெறுப்பின் ஆதரவாளர்களை...