×

நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பணியாளர்களுக்கு ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு


சென்னை: நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பணியாளர்களுக்கு மறுபணியமர்வு, உதவி வரைவாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் மற்றும் திறன்மிகு உதவியாளர் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் நெடுஞ்சாலைத் துறையில் சாலைகள், பாலங்கள் மற்றும் நிறைவு பெற்ற சாலைப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் அறிவித்தார்கள்.

சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், இன்று (31.1.2024) நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடைபெற்று வரும் சாலைகள், பாலங்கள் மற்றும் நிறைவு பெற்ற சாலைப் பணிகள் குறித்து, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் அவர்கள், 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளில், நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சாலைப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள்.

2022-2023 ஆம் ஆண்டில், 2,199 சாலைப் பணிகள் தொடங்கப்பட்டு, இதுவரை 1,989 பணிகள் நிறைவுப் பெற்றுள்ளன. மேலும், 2023-2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 1,574 சாலைப் பணிகளில், 343 சாலைப் பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சாலைப் பணிகளை முடிக்க அனைத்து பொறியாளர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அடுத்ததாக பாலங்கள் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு செய்த அமைச்சர் அவர்கள் பருவநிலை மாற்றங்களால், அடிக்கடி மிக அதிகமான மழை பொழிகிறது.

சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத கடும் மழை பெய்துள்ளது. பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டால்தான், பொது மக்களும், பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களும் பாலங்களை பயன்படுத்தி மழைநீர் பாதிப்பின்றி செல்ல முடியும். 2022-2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 60 பாலப் பணிகளில், இதுவரை 51 பாலப் பணிகள் நிறைவுப் பெற்றுள்ளன. 2023-2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 186 பாலப் பணிகளில், 11 பாலப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பாலப் பணிகளில் தனி கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும். அடுத்த ஆய்வு கூட்டத்திற்குள் அனைத்துப் பாலப் பணிகளும் நிறைவுப் பெற்றதாக தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் அவர்கள் கூறினார்.

விரைவாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய அமைச்சர் அவர்கள், பணிகளின் முன்னேற்றம் குறித்து, கோட்டப் பொறியாளர்கள் புகைப்படத்துடன் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். மேலும், மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சாலைகளையும் சீரமைத்து, போக்குவரத்து தங்குத்தடையின்றி செல்ல ஏதுவாக சரி செய்யப்பட வேண்டும்.

வெள்ள சீரமைப்புப் பணிகளுக்காக வெள்ளத்தால் பாதிப்படைந்த சென்னை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.250 கோடியும், நிரந்தர சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.500 கோடியும் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்காலிக சீரமைப்புப் பணிகளை மார்ச் 2024க்குள் முடிக்கப்பட வேண்டும். நிரந்தர சீரமைப்புப் பணிகளை நான்கு மாதக் காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்.

சாலை விபத்துகளைத் தடுக்க ரூ.150 கோடி மதிப்பீட்டில், 561 சாலைப் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளவும், சாலை சந்திப்புகளை ரூ.110 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்யவும், அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இப்பணிகள் எல்லாம் விரைவாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். பொது மக்களின் பாதுகாப்பினைக் கருதி, சாலை ஓரங்களில் உள்ள ஆபத்தான உடையும் நிலையில் உள்ள மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், அனைத்து பணிகளுக்கும் பணப்பட்டுவாடா செய்யும் முன் தரக்கட்டுப்பாடுப் பிரிவு அலுவலர்களைக் கொண்டு, தரத்தினை உறுதி செய்து கொண்ட பின்னரே பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என்றும், தரக்கட்டுப்பாட்டு அலுவலர்களின் அறிக்கையை அளவு புத்தகங்களில் (Measurement Book) பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.

பணிகள் முடிக்கும் வரை, பள்ளமில்லா சாலைகளாகப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு அந்த ஒப்பந்ததாரருக்கு உள்ளது. அதை உறுதி செய்ய வேண்டியது, அந்த பொறியாளரின் கடமையாகும் என்று குறிப்பிட்ட அமைச்சர் பணிகள் நடைபெறும்போது, சாலைப் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் அவர்களின் “விபத்தில்லா தமிழகம்“ என்ற இலக்கை அடைய சாலைகள் பள்ளமில்லா சாலைகளாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

“நம்ம சாலை செயலி“ பொது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. “நம்ம சாலை செயலி“ மூலம் ஏதேனும் குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டால், உடனே சீரமைக்க வேண்டும். வரையறுக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் ஒப்பந்தப் பணிகளில் முன்னேற்றம் இல்லாவிட்டால், கால தாமதத்திற்கு ஒப்பந்த விதிகளின்படி, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதில் எவ்வித தயவு தாட்சன்யம் காட்டக்கூடாது என்று அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

சாலைப் பணியாளர்கள் பல கோரிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர். அவற்றில் தகுதியான கோரிக்கைகளை பரிசீலித்து விரைவில் ஆணை பிறப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது முதன்மை இயக்குநர் மற்றும் தலைமைப் பொறியாளர் அலுவலகங்களில் உள்ள அலுவலக உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு சென்னை மற்றும் விழுப்புரம் வட்டத்தில் உள்ள 14 சாலைப் பணியாளர்கள் விருப்பத்தின் பேரில் அலுவலக உதவியாளராக மறுபணியமர்வு செய்யப்படுவார்கள்.
கடந்த 7 வருடங்களுக்கு பிறகு நீண்டநாள் கோரிக்கையான இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு தற்போது தகுதி வாய்ந்த வரைவு அலுவலர், இளநிலை வரைதொழில் அலுவலர், திறன்மிகு உதவியாளர் நிலை-1 அவர்களுக்கு இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்படும்.

நீண்டநாள் கோரிக்கையான இளநிலை வரைத் தொழில் அலுவலர் பதவி உயர்வு தற்போது தகுதி வாய்ந்த உதவி வரைவாளர் மற்றும் திறன்மிகு உதவியாளர் நிலை-1 அவர்களுக்கு இளநிலை வரைத் தொழில் பதவி உயர்வு வழங்கப்படும். இளநிலைப் பொறியாளர் பதவியில் உள்ள காலி பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க திறன்மிகு உதவியாளர்களின் (RI) ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டியல் விரைவில் முதன்மை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப சம்பந்தப்பட்ட கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஊட்டுப்பதவியில் (Feeder Cateogry) இளநிலைப் பொறியாளர் பதவிக்கு தகுதி வாய்ந்த 34 நபர்கள் உள்ளனர். இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கு தகுதி வாய்ந்த 95 நபர்கள் உள்ளனர். இவர்களுக்கு விரைவில் ஆணை வழங்கப்படும். இந்த ஆய்வுக்கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் N. சாந்தி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் திரு. R. கோதண்டராமன், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்கள், கோட்டப் பொறியாளர்கள், துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பணியாளர்களுக்கு ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Minister A. ,Chennai ,Kindi Highway Research Station ,Velu ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...