×

ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புறத்தில் உள்ள கழிவுகளை அகற்ற திட்டம் வகுக்க வேண்டும்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள கழிவுகளை அகற்றி, சீர் செய்வதற்கான திட்டத்தை வகுக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். 100-வது நாள் போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.

நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தால் கடந்த 2018-ம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், ஆலை மூடப்பட்டாலும் அபாயகரமான கழிவுகள் ஆலை வளாகத்தில் தேங்கி கிடைப்பதால் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆலையை இடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் பாத்திமா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி பாரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆலையை மூடுவதற்கு பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கானது பிப்.13, 14-ல் தேதிகளில் விசாரணைக்கு வர உள்ளது. ஆலை மூடப்பட்டுள்ளதால் தற்போது மாசு ஏதும் ஏற்படவில்லை என்று வேதாந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள கழிவுகளை அகற்றி, சீர் செய்வதற்கான திட்டத்தை வகுக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

The post ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புறத்தில் உள்ள கழிவுகளை அகற்ற திட்டம் வகுக்க வேண்டும்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Pollution Control Board ,Thoothukudi ,Madras High Court ,
× RELATED ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற...