×

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு; முன்னாள் அமைச்சர் அன்பழகன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை: 14ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

தர்மபுரி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், முன்னாள் அதிமுக அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர், தர்மபுரி நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகவில்லை. உறவினர்கள் 7 பேர் ஆஜராகினர். இதையடுத்து நீதிபதி, வரும் 14ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கெரகோடஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கே.பி.அன்பழகன் (64). பாலக்கோடு தொகுதி அதிமுக எம்எல்ஏவாக உள்ளார். இவர் கடந்த அதிமுக ஆட்சியின் போது உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.

கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு காலக்கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தர்மபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, கடந்த 2022 ஜனவரி 18ம் தேதி கே.பி.அன்பழகன் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 58 இடங்களில், ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதில் ₹45.20 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், உறவினர்கள் ரவிசங்கர், சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், மாணிக்கம் மனைவி மல்லிகா, தனபால், சரஸ்வதி பச்சியப்பன் எஜூகேசன் அறக்கட்டளை நிர்வாகி ஆகிய 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த மே 22ம் தேதி இந்த வழக்கு தொடர்பான, 10 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை, தர்மபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்களை, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பெற்று கொண்டார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கே.பி.அன்பழகன், மல்லிகா, மகன்கள் ஆஜராகவில்லை. சரவணன், சரவணக்குமார், மாணிக்கம் உள்ளிட்ட 7 பேர் ஆஜராகினர். இதையடுத்து வரும் 14ம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.

The post வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு; முன்னாள் அமைச்சர் அன்பழகன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை: 14ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : minister ,Anbazhagan ,Dharmapuri ,Former ,AIADMK ,KP Anpahagan ,Dharmapuri court ,Anbazhakan ,Dinakaran ,
× RELATED கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த விவசாயி பலி