×

வற்றாத வளமருள்வார் வழுவூர் வள்ளல் தங்கக்கை ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்

ஸ்ரீசேஷாத்ரிசுவாமி 154-வது ஜெயந்தி 31-01-2024

ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் தொன்மையான பரம்பரையில் 1870-ம் வருடம், ஜனவரி 22-ம் தேதி, தை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவரின் அவதாரமே ஆச்சரியங்கள் நிறைந்தது. ஏனெனில், இவரது பெற்றோரான வரதராஜர், மரகதம் புண்ணிய தம்பதிக்கு திருமணமாகி பல வருடங்கள் மழலைப் பேறு இல்லை. இவர்கள் இருவரும் ராமேஸ்வரம் உள்ளிட்ட சகல புண்ணிய ஸ்தலங்களுக்கும் சென்று வந்தனர். மிகுந்த நியமத்துடன் மங்கள சஷ்டி, மங்கள குமார விரதத்தை அனுஷ்டித்தனர்.

ஆனாலும், குழந்தைப் பேறு இல்லை. ஒருநாள், ஸ்ரீகாமாகோடி சாஸ்திரி அவர்களை அணுகி, ‘‘இன்னும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகவில்லையே’’ என்று மரகதம் அம்மையார் அழுதார். காமகோடியார் கவலைப்படாதே என்று அவர்களின் குலதேவியான காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை நோக்கி வேண்டினார். அன்றிரவே அம்பாள் கனவில் வந்தாள். ‘‘நவநீதம் கொடு ஞானக்கலை உதிக்கும்’’ என்று அருளாணை இட்டாள்.

காமாட்சியின் பேரருளால் மரகதம், வரதராஜர் தம்பதிக்கு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் பிறந்தார். ஒருமுறை தாயாரோடு காஞ்சிக் கோயில் உற்சவத்திற்காக வெளியே சென்றபோது, அங்கு கிருஷ்ணருடைய பொம்மைகளை விற்கும் வியாபாரி இந்தக் குழந்தையை கண்டார். குழந்தையும் கைநீட்டி அந்த விக்கிரகம் வேண்டுமென கை நீட்டியது. நீட்டிய திருக்கரத்தில், அந்த வியாபாரி தன்னிடமிருந்த நூற்றுக் கணக்கான பொம்மையில் ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.

அவ்வளவுதான். மறுநாள் அந்த வியாபாரி இவர்களை தேடிக்கொண்டு வந்து விட்டார். ‘‘அம்மா… அம்மா… இது சாதாரண குழந்தையல்ல. நீங்கள் பெரும் பாக்கியம் செய்திருக்கிறீர்கள். குழந்தையின் கைபட்டவுடன் நேற்று ஒரே நாளில் என்னுடைய அனைத்து பொம்மைகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அம்மா… இந்தக் கை சாதாரண கையல்ல…. தங்கக்கை… தங்கக்கை…’’ என்று கண்களில் ஒற்றிக் கொண்டார். அன்றிலிருந்து தங்கக்கை சேஷாத்ரி என்றே அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

மெல்ல ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஞானக் கனல் எல்லோரையும் அணைத்தது. இவர் பார்க்கத்தான் பித்து பிடித்தவர். இவர் அலையும்போது பேயராய் இருக்கிறார். தனக்குள் சிரித்துக் கொண்டு பாலராய் விளங்குகின்றார். ஆனால், ஸ்ரீசேஷாத்ரி தனக்குள் தானாக நின்று ஜொலிக்கும் பிரம்மம் என்று பலரும் வந்து வணங்கினர்.

திருவண்ணாமலை பாதாள லிங்கத்தினடியில் உடல் முழுவதும் மண் அரித்து ஞானத் தபோதனராய் அமர்ந்திருந்த ஸ்ரீரமண மகரிஷியை, இது பெரிய வைரம்… பெரிய வைரம் என்று மெல்ல வெளியே கொண்டுவந்து இதைப் பிடித்துக் கொள்ளுங்கள். இதைச் சரணடையுங்கள். இது பர பிரம்மம்… பரபிரம்மம்… என்று உலகிற்கு முதன்முதலில் அறிவித்தார். அன்றுமுதல் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளும், ஸ்ரீரமண மகரிஷிகளும் சகோதர ஞானியராக விளங்கினர்.

ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் 4.1.1929ம் வருடம் வெள்ளிக் கிழமையன்று விதேக கைவல்யம் எனும் தன்னுடைய தேகத்தைவிட்டார். அவருடைய ஜீவசமாதி பிரதிஷ்டையின்போது ஸ்ரீரமண பகவான் அருகேயே இருந்து எப்படி செய்யப்பட வேண்டுமென வழிகாட்டினார். இன்றும் திருவண்ணாமலையில் செங்கம் சாலையில் ஸ்ரீரமணாஸ்ரமத்திற்கு அருகிலேயே இவரது ஜீவசமாதி அதிஷ்டானம் அமைந்துள்ளது. சூட்சுமமாக அவரின் அருள் வெளிப்பட்டு பக்தர்களின் இதயத்தை நிறைக்கின்றது.

இப்படிப்பட்ட பெரும் ஞானியின் அவதாரத் தலமான வழுவூரில் அவர் அவதரித்த இல்லத்தை. அவர் தாயார் மரகதம் அம்மையார் பூஜித்த துளசி மாடத்தை அப்படியே வைத்து வழுவூரில் மணிமண்டபம் அமைத்திருக்கிறார்கள். இந்த அற்புதமான பணியை அவரது பக்தர்கள் ஒருங்கிணைந்து செய்து முடித்திருக்கிறார்கள். இது அவர் அவதரித்த அகமா அல்லது ஆலயமா என்று பிரமிக்கும் அளவுக்கு பிரமாண்டமாக கட்டியிருக்கிறார்கள்.

பெரும் மண்டபத்தின் நடுவே ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் திவ்ய மங்கள திருமேனிச் சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். சர்வ வியாபியான சுவாமிகளின் திருமுகம் மலர்ந்து பேரருள் பொங்க வீற்றிருக்கின்றார். அந்தச் சந்நதியில் நம் அகம் குழைகின்றது. மனம் விண்டு போகிறது. இப்பேற்பட்ட ஞானியின் முன்பு நானெல்லாம் ஒன்றுமில்லை என்று அகங்காரம் ஓடி ஒளிகின்றது.

எல்லா மாதங்களிலும் வரும் ஹஸ்தம் நட்சத்திரத்தன்று, அதாவது சுவாமிகளின் ஜென்ம நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. எப்போதெல்லாம் உங்களுக்கு நேரமும் விடுமுறையும் அமைகின்றதோ அப்போதெல்லாம் வழுவூருக்குச் சென்று சுவாமிகளின் சந்நதியில் அமர்ந்துவிட்டு வாருங்கள். வழூவூர் எனும் இத்தலம் உத்திரமேரூர் தாண்டி வந்தவாசி செல்லும் வழியில் அமைந்துள்ளது.

The post வற்றாத வளமருள்வார் வழுவூர் வள்ளல் தங்கக்கை ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் appeared first on Dinakaran.

Tags : Perennial Valamarulvar Valluvoor Vallaal Thangakai ,Sriseshatri Swami ,Sreeseshatri Swamy ,Sreeseshatri Swami ,Hastam ,Nakshatra ,Varadaraja ,
× RELATED செயல்கள் தடுமாறுவதற்கு காரணங்கள் இதுதான்