×

ஏன் எதற்கு எப்படி..?: குழந்தைகளுக்கு ராசிபலன் பார்க்கலாமா?

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

?குருபார்வைக்கும் குருஸ்தானத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன ஐயா?
– அதிதி, வண்டலூர்.

உங்களுடைய கேள்வி, ஜோதிட ரீதியாக அமைந்திருக்கிறது என்று கருதுகிறேன். ஜனன ஜாதகத்தில் லக்னம் அல்லது ராசியினை குருபார்த்தால், குருபலம் அல்லது குருபார்வை என்று சொல்வார்கள். குருவிற்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உண்டு. அதாவது, குரு அமர்ந்திருக்கும் ராசியில் இருந்து எண்ணி வர 5,7,9 ஆகிய இடங்களில் சந்திரனோ அல்லது லக்னமோ அமைந்திருந்தால் குருபார்வை உண்டாகி இருக்கிறது என்று பொருள்.

இதனால், குருபலம் என்பது கிடைத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கிறது. குருஸ்தானம் என்றால் ஜோதிட ரீதியாக குரு அமர்ந்திருக்கும் இடம் என்று பொருள். லக்னம் அல்லது சந்திரனுக்கு 1,2,4,5,7,9,10,11 ஆகிய இடங்களில் குரு அமர்ந்திருந்தால் குரு அமர்ந்த ஸ்தான பலம் என்பது வெற்றியைத் தருகிறது. தத்துவார்த்தமாகப் பார்த்தால், தொடர்ச்சியான குருபார்வை என்பது ஒரு சாமானியனையும் குருஸ்தானத்திற்கு உயர்த்துகிறது என்று பொருள் கொள்ளலாம்.

?குழந்தைகளுக்கு ராசிபலன் பார்க்கலாமா?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.

குழந்தைகளுக்கு தினசரி ராசிபலன் பார்க்கக் கூடாது. ஒரு வயது முடிந்ததும், சிகை நீக்கி, காதணிவிழா நடத்தப்பட்ட பிறகு, ஜனன ஜாதகத்தைக் கணித்து பலன்களை அறிந்து கொள்ளலாம். ஆனால், பத்திரிகை மற்றும் தொலைக் காட்சிகளில் வெளிவரும் ராசிபலன்கள் என்பது, சந்திரன் நிற்கும் ராசியினைக் கொண்டு பலன் சொல்லப்படுகின்ற முறை. இந்த முறை 30 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கானது. இதனை குழந்தைகளிடம் பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

?கனவில் நல்லது வந்தால் கெட்டதும் கெட்டது வந்தால் நல்லதும் நடக்கும் என்று கூறுவது?
– வண்ணை கணேசன், சென்னை.

உண்மை இல்லை. கனவிற்கான பலன் என்பது அது உண்டாகும் நேரத்தினைப் பொறுத்தது. பகல் கனவு பலிக்காது. இரவில் கனவு தோன்றினாலும் கடைசி யாமத்தில் தோன்றும் கனவு மட்டும் பலிக்கும். அதுகூட கனவினைக் கண்ட நபர் இரவு உறக்கத்தின்போது நடுவில் எழுந்திருக்காமல் தொடர்ந்து உறங்கியிருந்தால் மட்டுமே பலிக்கும். இதுபோல கனவு பலன்களுக்கு பல்வேறு விதிமுறைகள் உண்டு. ஆனால் நல்லது வந்தால் கெட்டது நடக்கும் என்று சொல்வது நம் கற்பனையே. கெட்டது வந்தால் நல்லது நடக்கும் என்று சொல்வது நம் ஆழ்மனதில் இருக்கும் பயத்தினைப் போக்கி நமக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காகத்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

?எந்தெந்த தெய்வங்களை மாவிளக்கு ஏற்றி வழிபட வேண்டும்? அதன் சிறப்பு என்ன?
– பி.கனகராஜ், மதுரை.

பெருமாள், முருகன், அம்மன் ஆகியோருக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவது என்பது வழக்கத்தில் உள்ளது. இது முதலில், மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் தெய்வங்களுக்கான வழிபாடு என்ற முறையில், தோன்றி நாளடைவில் பரவலாகிவிட்டது. அந்த நாட்களில் எல்லோராலும் நினைத்த நேரத்தில் மலை ஏறிச்சென்று தெய்வங்களை வழிபட இயலாது. அவ்வாறு மலை ஏறிச்சென்று இறைவனை வழிபட்டு வந்தவர்கள் வீடு திரும்பியதும் மாவிளக்கு ஏற்றிவைத்து அந்த ஆலயத்தில் இருந்து கொண்டுவந்த பிரசாதங்களையும் அங்கே வைத்து வழிபட்டு தன் சுற்றத்தாரையும் நண்பர்களையும் அழைத்து எல்லோருக்கும் தனது தெய்வானுபவத்தையும், பிரசாதங்களையும் பங்கிட்டு அளித்ததே மாவிளக்கு வழிபாட்டின் தனிச்சிறப்பாக அமைந்தது.

இந்த நடைமுறையைத் தொலைதூரத்தில் அமைந்துள்ள விசேஷ ஸ்தலங்களில் அமர்ந்து அருள்பாலிக்கும் தெய்வங்களை தரிசித்து வீடு திரும்பியவர்களும் பின்பற்றினார்கள். தான் பெற்ற தெய்வ அனுபவத்தை எல்லோரும் பெற வேண்டும் என்ற நல்லெண்ணெத்தினால் உருவானதே மாவிளக்கு வழிபாடு. அதேபோல, பிரதி வருடம்தோறும் அந்த தெய்வங்களை நினைத்து வீட்டிலேயே மாவிளக்கு வழிபாட்டின் மூலம் பூஜித்து வந்தார்கள். அது காலப் போக்கில் சம்பிரதாயமாக மாறிவிட்டது.

?மறுஜென்மம் என்பது மனிதனின் கற்பனையா?
– சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

நிச்சயமாக இல்லை. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்ற அவ்வையின் கூற்றின்படி, எத்தனையோ பிறவிகளைக் கடந்து இந்த மனிதப்பிறவியை எடுத்திருக்கிறோம் என்பது புலனாகிறது. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று சிலப்பதிகாரம் நமக்கு அடித்துச் சொல்கிறது. அதாவது, முன்ஜென்மப் பலனைத்தான் இந்த ஜென்மாவில் அனுபவிக்கிறோம் என்பதும் இதன் மூலம் புலனாகிறது. புனரபி ஜனனம் புனரபி மரணம் என்கிறார் ஆதிசங்கரர்.

வேதம் சொல்கின்ற கருத்துக்களைத் தான் நம்முடைய முன்னோர்கள் நமக்கு எளிதாகப் புரிகின்ற வகையில் எடுத்து உரைத்திருக்கிறார்கள். ஜோதிட சாஸ்திரம்கூட பதவீ பூர்வபுண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா என்று உரைக்கிறது. அதாவது, முன்ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்தின் பலனை இந்த ஜென்மாவில் அனுபவிக்கும் விதமாக இந்த ஜாதகம் அமைந்துள்ளது என்பது இதன் பொருள். இப்படி எல்லா இடங்களிலும் முன்ஜென்மம் பற்றி பேசப்படுவதால், மறுஜென்மம் என்கின்ற வார்த்தையும் உண்மையாகிறதுதானே! மறுஜென்மம் என்பது நிச்சயமாக மனிதனின் கற்பனை அல்ல. அது முற்றிலும் உண்மையே.

?சில ஜோதிடர்கள் மணமுடிக்க தேய்பிறையில் நாள் குறிப்பது ஏன்?
– சு.ஆறுமுகம், கழுகுமலை.

தேய்பிறையாக இருந்தாலும், அந்த நாட்களில் நேத்ரம், ஜீவன் என்பது இடம்பெற்றிருக்கும். நேத்ரம், ஜீவன் ஆகிய இரண்டும் முழுமையாக இருந்தால், அந்த நாள் ஆனது தேய்பிறை நாளாக இருந்தாலும் வளர்பிறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பார்வை எனப்படும் நேத்ரம், உயிர் எனப்படும் ஜீவன் ஆகிய இரண்டும் முழுமையாக இருக்கும் பட்சத்தில், தேய்பிறை நாட்களிலும் முகூர்த்தம் வைக்கலாம் என்கிற விதிமுறையைப் பின்பற்றியே ஜோதிடர்கள் நாட்களைக் குறித்துத் தருகிறார்கள்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஏன் எதற்கு எப்படி…?
தினகரன், ராசி பலன்கள்
தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை – 600 004.

The post ஏன் எதற்கு எப்படி..?: குழந்தைகளுக்கு ராசிபலன் பார்க்கலாமா? appeared first on Dinakaran.

Tags : Thirukovilur ,KBHariprasad Sharma ,Guru ,Parva ,Gurusthan ,Aditi ,Vandalur ,
× RELATED கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!!