×

மதுபான கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5வது முறையாக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!!

புதுடெல்லி: மதுபான கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து டெல்லியை 32 மண்டலங்களாக பிரித்து 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட இந்த மதுபான கொள்கையில் ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பரிந்துரை செய்தார்.

இதையடுத்து டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31 இடங்களில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 2022ஆம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை செய்த சிபிஐ அதிகாரிகள், டெல்லி தலைமை செயலகத்தில் உள்ள மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். இதையடுத்து கடந்த 2023, பிப்ரவரி மாதம் மணீஷ் சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டார். அவர், பலமுறை ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 11 மாதங்களாக அவர் விசாரணை கைதியாக சிறையில் இருந்து வருகிறார்.

இதே வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை கடந்த நவம்பர் 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க துறை சம்மன் அனுப்பியது. அவர், ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த டிசம்பர் 21ம் தேதி மீண்டும் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. அப்போதும் ஆஜராகவில்லை. மீண்டும் கடந்த 3ம் தேதி ஆஜராக வேண்டும் எனவும் இல்லையெனில் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்தது. அப்படியும் ஆஜராகவில்லை. அதனால் அவர் கைது செய்யப்படலாம் என அக்கட்சியினர் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். தொடர்ந்து 18ம் தேதி ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதனையும் கெஜ்ரிவால் புறக்கணித்தார். இதனிடையே கெஜ்ரிவால், ‘அமலாக்க துறை என்னை கைது செய்ய நினைக்கிறது. மக்களவை தேர்தலில் என்னை பிரசாரம் செய்ய விட கூடாது என்பதுதான் அவர்களது நோக்கம். அமலாக்க துறை அனுப்பிய சம்மன் சட்ட விரோதமானது’ என்றார்.

இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 5-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது. பிப்ரவரி 2ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது இந்தியா கூட்டணி சார்பில் பாஜவுக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக ஆம் ஆத்மி இருக்கிறது. அப்படி இருக்கையில் பாஜ, எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதாக இந்தியா கூட்டணி கடுமையாக சாடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post மதுபான கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5வது முறையாக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Enforcement Directorate ,New Delhi ,Aam Aadmi Party ,Dinakaran ,
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...