×

பழனி கோவிலில் வழிபாடு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்க: தமிழ்நாடு அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: பழனி கோவிலில் வழிபாடு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி, 1947-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில், இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோயிலுக்குள் நுழைவதை தடுக்கின்றது என்று கூறி, பழனியைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி அவர்கள், “இந்து அல்லாதவர்களை கோயிலின் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது. ‘இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்ற பதாகையை கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும்” என உத்திரவிட்டுள்ளார். மேலும் “மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் கோயிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும்.

அந்தப் பதிவேட்டில், இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உத்தரவாத உறுதிமொழி எழுதிக் கொடுத்த பின்பு கோயிலுக்குள் அனுமதிக்கலாம்” என்று உத்தரவிட்ட நீதிபதி, “இந்து அறநிலையத்துறை ஆணையர் கோயிலின் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்” எனவும் உத்தரவு பிறப்பித்தார். இத் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இறை நம்பிக்கை உள்ளவர்கள், அவர்கள் விரும்பிய வழிப்பாட்டுத் தலங்களில் வழிபடுவது அவரது நம்பிக்கைக்கு உரியது. நாகூர் தர்காவிலும், வேளாங்கண்ணி மாதா கோவிலிலும் இந்துக்களும் பிற மதத்தினரும் வழிபட்டு வருகின்றனர். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ள இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post பழனி கோவிலில் வழிபாடு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்க: தமிழ்நாடு அரசுக்கு வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Palani temple ,Vaiko ,Tamil ,Nadu ,Chennai ,Madhyamik General Secretary ,Palani Dandayuthapani Swamy Temple ,Department of Hindu Religious Charitable Trusts ,Government of Tamil Nadu ,Hindu… ,Tamil Nadu ,
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...