×

சீனா, ரஷ்யா, துருக்கி நாடுகளில் உள்ளது போல, ஒற்றை கட்சி தலைமை இல்லாமல் இருப்பதை உறுதிசெய்வோம் : ப.சிதம்பரம்

சென்னை : அதிகாரம் எப்படி துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதற்கு சண்டிகர் மேயர் தேர்தல் உதாரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பஞ்சாப், அரியானா மாநிலங்களின் தலைநகராக உள்ள சண்டிகரில் மேயர், துணை மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது.இதில் மேயர் பதவிக்கு பாஜ சார்பில் மனோஜ் சோங்கரும், ஆம் ஆத்மி சார்பாக குல்தீப் குமாரும் போட்டியிட்டனர்.35 உறுப்பினர்கள் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில் பாஜவுக்கு 16 கவுன்சிலர்களும் ஆம் ஆத்மீ க்கு 20 கவுன்சிலர்களும் வாக்களித்தனர்.

அப்போது, 8 வாக்குச்சீட்டில் சில குறியீடுகள் இருப்பதாக கூறி அவற்றை செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டது. இறுதியில் பாஜ வேட்பாளர் மனோஜ் 16 வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தில்லுமுல்லு செய்து பாஜ வெற்றி பெற்றிருப்பதாக ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. அந்த வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், “அதிகாரம் எப்படி துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதற்கு சண்டிகர் மேயர் தேர்தல் உதாரணம்.

பீகாரில் நடந்ததற்கும் கர்நாடகா, மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் மகாராஷ்டிராவில் நடந்ததற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை.மக்கள் தீர்ப்பு பாஜக-ஆர்எஸ்எஸ்-க்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. வெவ்வேறு தேர்தலில் வெவ்வேறு கட்சியை தேர்வு செய்யாவிட்டால் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்காது.சீனா, ரஷ்யா, துருக்கி, மற்றும் பல ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் உள்ளது போல, இந்தியாவின் ஒற்றை கட்சி தலைமை இல்லாமல் இருப்பதை உறுதிசெய்வோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post சீனா, ரஷ்யா, துருக்கி நாடுகளில் உள்ளது போல, ஒற்றை கட்சி தலைமை இல்லாமல் இருப்பதை உறுதிசெய்வோம் : ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : China ,Russia ,Turkey ,P. ,Chidambaram ,Chennai ,Congress ,P. Chidambaram ,Chandigarh Mayoral election ,Chandigarh ,Punjab ,Aryana ,
× RELATED சீனாவின் டிராகன் படகுத் திருவிழா கோலாகலம்..!!