×

ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் : தமிழக அரசு தகவல்

சென்னை : ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்.”தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழில்துறை குழுமங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் 29.1.2024 அன்று தொழில் முதலீட்டு மாநாட்டில் கலந்துரையாடினார்கள்.அதன் தொடர்ச்சியாக, நேற்று (30.1.2024) ஸ்பெயின் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பேசினார்கள். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்திட வலியுறுத்தினார்கள்.

ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் Mr. Rafael Mateo भगांकén, Mr. Manuel Manjón Vilda, CEO Water Division அவர்களும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து பேசினார்கள். இச்சந்திப்பின்போது, காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் சுத்திகரிப்பு. நீர் மறுசுழற்சியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவது குறித்தும், இத்துறையில் பல பெரும் முக்கிய நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவது குறித்தும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளுக்கான தனிக்கொள்கை ஒன்றையும் வகுத்து தமிழ்நாடுஅரசு செயல்படுத்தி வருகின்றது என்றும், எனவே இத்துறைகளில் சர்வதேசஅளவில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகிய ஆக்சியோனாநிறுவனத்தின் முதலீட்டிற்கு உகந்த இடமாக தமிழ்நாடு இருக்கும் என்று முதலமைச்சர் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

இத்துறையின் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி தொழில்துறை அமைச்சர் அவர்கள் விரிவாக விளக்கினார்கள். இந்த கலந்தாலோசனையில் முடிவில் தமிழ்நாட்டில் இத்துறைகளில் முதலீடுகள் செய்ய ஆக்சியானா நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.அதனைத் தொடர்ந்து, பீங்கான் மற்றும் வீட்டுக் கட்டுமான பொருட்களின் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் Mr.Carlos Velazquez அவர்களும் இந்திய இயக்குநர் திரு. நிர்மல் குமார் அவர்களும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்துப் பேசினார்கள்.இச்சந்திப்பின்போது, ரோக்கா நிறுவனம், தற்போது தமிழ்நாட்டில்பெருந்துறையிலும், இராணிப்பேட்டையிலும் செயல்பட்டு வரும் நிலையில்,இந்தியாவில் இந்த நிறுவனத்தின் விற்பனையை மேலும் உயர்த்திடவும்,சர்வதேச ஏற்றுமதிக்காகவும், இதன் விரிவாக்கத்தையும் புதிய தொழில் அலகுகளையும் தமிழ்நாட்டில் அமைத்திட வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

தொழில்துறை அமைச்சர் அவர்களும் இத்துறையில் முதலீடு செய்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் தமிழ்நாட்டில் நிலவி வரும் சாதகமான சூழல் பற்றி விளக்கினார்கள். இந்த கூட்டத்தின் முடிவில், ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது அதன்படி, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையை நிறுவிடவும். இராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் தற்போது செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் ரோக்கா நிறுவனம் முன்வந்துள்ளது. இதனால் 200 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.இச்சந்திப்புகளின்போது, ‘Guidance’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு.வே.விஷ்ணு, இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார்.இதனை அடுத்து, வரும் நாட்களில் மேலும் பல முன்னணி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதலீட்டு ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளார்கள்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் : தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Spain ,Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...