×

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு அமலாக்கத்துறை பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கடந்த 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் 2வது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 230 நாட்களுக்கு மேல் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு, அவர் அமைச்சராக நீடிப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்தது. கடை நிலை ஊழியர் ஒருவர், 48 மணி நேரம் சிறையில் இருந்தால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார். ஆனால், 230 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிக்க அனுமதிப்பதன் மூலம் மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், கண்டன தீர்மானத்தை எதிர்கொண்ட நீதிபதி, தொடர்ந்து பதவியில் நீடிக்கலாமா? அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது கண்டன தீர்மானம் வந்தபோது, அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பது குறித்து அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. விருப்பமுள்ளவர்கள் அவர் முன் ஆஜராகலாம் என்று அவர் கூறினார். தொடர்ந்து அவர் நீதிபதியாகவும் நீடித்தார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்துள்ளது. அமைச்சரை நீக்குவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று பதிலளித்தார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி மனு மீதான விசாரணையை பிப்ரவரி 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

The post அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு அமலாக்கத்துறை பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Enforcement Department ,Chennai ,Madras High Court ,
× RELATED அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில்...