×

‘யூகலிப்டஸ்’ மரங்கள் வெட்டப்படுவதால் நீலகிரி தைல உற்பத்தியாளர்கள் பாதிப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ‘யூகலிப்டஸ்’ மரங்கள் வெட்டப்படுவதால், தைல உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நீலகிரி தைல தொழிலை பாதுகாக்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் வெளிநாட்டில் இருந்து ‘யூகலிப்டஸ்’ மரங்கள் நீலகிரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டன. நீலகிரியில் சுமார் 11 ஏக்கர் பரப்பளவில், யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன. இந்த மரத்தில் இருந்து, காய்ந்து விழும் இலைகளை சேகரித்து, அதில் இருந்து யூகலிப்டஸ் மருத்துவ குணம் கொண்ட தைலம் தயாரிக்கும் பணி, குடிசை தொழிலாக பலர் மாவட்டம் முழுவதும் செய்து வருகின்றனர்.

கடந்த 15 ஆண்டுக்கு முன்பு வரை, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாக தைலம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், ‘யூகலிப்டஸ்’ மரங்கள் அதிகளவு நீரை உறிஞ்சிக் கொள்வதாலும், இந்த மரங்கள் உள்ள இடத்தில் வேறு எந்த தாவரங்களும் வளர வாய்ப்பில்லை என்பதாலும், கடந்த 5 ஆண்டுகளாக, கற்பூர மரங்கள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான கற்பூர மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக, தைலம் தயாரிக்கும் குடிசை தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால், இதனை நம்பி வசித்து வந்த தொழிலாளர்கள் வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர். நீலகிரியில், கடந்த காலங்களில், 1000க்கும் மேற்பட்ட யூகலிப்டஸ் தைல உற்பத்தி கொட்டகைகள் இருந்தது. தற்போது 400 தைல உற்பத்தி கொட்டகைகள் மட்டுமே உள்ளன.

பொதுவாக, 100 கிலோ இலையில், ஒரு லிட்டர் தைலம் உற்பத்தி செய்ய முடியும். முன்பு ஒரு கொட்டகையில், மாதம் ஒன்றுக்கு, 600 லிட்டர் தைலம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, மாதத்திற்கு, 150 லிட்டர் தைல உற்பத்தியை கூட செய்ய முடிவதில்லை. தற்போது ஒரு லிட்டர் தைலம் ரூ.1000 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோடை காலம் தொடங்கியுள்ளதால், தைல உற்பத்தி விறுவிறுப்படைந்துள்ளது. சீன தைலம் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால், நீலகிரி தைல விற்பனை பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, நீலகிரி தைல தொழிலை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தைல உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ‘யூகலிப்டஸ்’ மரங்கள் வெட்டப்படுவதால் நீலகிரி தைல உற்பத்தியாளர்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Neelgiri ,NEILGIRI DISTRICT ,Nilgiri ,Nilagiri ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால்...