×

சாப்பாடு குறைவாக இருந்ததால் தகராறு புழல் சிறையில் 2 கைதிகள் மோதல்

புழல்: புழல்சிறையில் சாப்பாடு குறைவாக இருந்த தகராறில் இரு கைதிகள் மோதிக்கொண்டனர். இதில் ஒரு கைதி காயமடைந்து சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை புழல் சிறைசாலையில் தண்டனை சிறை, விசாரணை சிறை மற்றும் பெண்கள் சிறைகள் உள்ளது. இங்கு 200 பெண்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் வழக்கம்போல் விசாரணை சிறையில் மதிய உணவு வழங்கப்பட்டது.

சிறையில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் பஞ்சாட்சரம் (28) என்பவர், மாதவரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார். இவர், சாப்பாட்டை எடுத்து சென்று மற்றொரு கைதியான சென்னை மதுரவாயல் கன்னியம்மன் நகரை சேர்ந்த மூர்த்தி (23) என்பவரிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கிய மூர்த்தி, ஏன் சாப்பாடு குறைவாக உள்ளது என கேட்டுள்ளார். இதனால் ரமேஷ்பஞ்சாட்சரத்துக்கும் மூர்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ரமேஷ் பஞ்சாட்சரம், மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மூர்த்தியின் 2 பற்கள் உடைந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற கைதிகள் இருவரையும் மடக்கி பிடித்து சண்டையை விலக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த மூர்த்தியை சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சிறை துறை சார்பில் புழல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் புழல் சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சாப்பாடு குறைவாக இருந்ததால் தகராறு புழல் சிறையில் 2 கைதிகள் மோதல் appeared first on Dinakaran.

Tags : Puzhal Jail ,Puzhal ,Puzhal Jail, ,Chennai ,
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...