×

கர்ப்பப்பைவாய் புற்றுநோய் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

மகப்பேறு மருத்துவர் ஆர். திவ்யாம்பிகை

பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றநோய்களில் மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக இருப்பது, கர்ப்பப்பைவாய் புற்றுநோயாகும். 2020 ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி, உலகளவில் 3,42,000 பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்துள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது. இதில், இருபத்தொரு சதவீதம் இந்திய பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் குறித்த, விழிப்புணர்வு பெண்களிடையே இல்லாததே…

இதற்காகவே, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முழுவதுமே, கர்ப்பப்பைவாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள், சிகிச்சைமுறை போன்றவற்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மகப்பேறு மருத்துவர் ஆர். திவ்யாம்பிகை.

கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் ஏற்படும் காரணங்கள்:

கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் என்பது யூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) என்ற வைரஸ் கிருமியின் தாக்குதலால் ஏற்படுகிறது. இந்த பாப்பிலோமா வைரஸ் திருமணத்துக்கு பின் உடலுறவு கொள்வதால் சிலருக்கு ஏற்படும் வைரஸ் தொற்றாகும். இந்த வைரஸ் தாக்கிய பின் உடனடியாக எந்த பாதிப்பும் தெரியாது. ஆனால், 10-15 ஆண்டுகள் கழித்து இது புற்றுநோயாக மாறும் தன்மைக் கொண்டது.

பொதுவாக, சில பெண்களுக்கு திருமணத்துக்கு பின்பு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு, நாளடைவில் தானாக சரியாவதும் உண்டு. இதனால், பெரும்பாலான பெண்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டதே கூட தெரியாமல் போகும். ஆனால், தானாக சரியாகாமல் தொடரும்போதுதான் அது புற்றுநோயாக உருமாற்றம் பெறுகிறது.அதுபோன்று, ஒருவர் பலருடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதாலும் இந்த பாப்பிலோமோ வைரஸ் கிருமி தாக்கும் அபாயம் உண்டு.

அறிகுறிகள்:

ஆரம்ப கட்டங்களில், கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் பொதுவாக எந்த அறிகுறிகளையும் கொண்டிருப்பதில்லை. இதனால், கண்டறிவது கடினம். ஆனால், புற்றுநோய் பரவத் தொடங்கும் ஆரம்ப கட்டங்களில் சில அறிகுறிகள் தோன்றலாம். உதாரணமாக, ஒரு மாதவிடாய் முடிந்து அடுத்த மாதவிடாய் தொடங்கும் இடைப்பட்ட காலத்திற்குள் மீண்டும் ஒரு உதிரப் போக்கு ஏற்படும். சிலருக்கு உடலுறவுக்கு பின் உதிரப்போக்கு ஏற்படும். சிலருக்கு தொடர்ந்து துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதல் வெளிப்படும். சிலருக்கு மலக்குடலில் ரத்தப்போக்கு ஏற்படும் வாய்ப்பு உண்டு. அடிவயிற்றில் வலி, முதுகுவலி போன்றவை தொடர்ச்சியாக இருப்பதும் ஒரு அறிகுறியாகும்.

சிகிச்சைமுறை:

இந்த புற்றுநோயை பொறுத்தவரை பல்வேறு சிகிச்சை முறைகள் இருக்கின்றன. இருந்தாலும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் சில எளிய சிகிச்சை முறைகளிலேயே சரி செய்துவிட முடியும். அதே சமயம், சற்று தீவிர நிலையில் இருந்தால் கர்ப்பப்பையை அகற்றிவிட வேண்டும். ஒருவேளை முற்றிய நிலையில் இருந்து கர்ப்பப்பையை விட்டு சுற்றி வெளியிலும் தொற்று பரவி இருந்தால், ரேடியா தெரபி, கீமோ தெரபி போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். அந்நோயின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை முறைகள் மாறுபடும்.

தற்காத்துக் கொள்ளும் வழிகள்:

பொதுவாக தற்காத்துக் கொள்ளும் வழிகள் என்றால் கான்டோம் போன்றவற்றை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்வதன் மூலம் இந்த நோய்த் தொற்றைத் தடுக்க முடியும்.இன்றைய சூழலில், பல இளவயதினர் திருமணத்துக்கு முன்பே பாலியல் ரீதியான உறவுகளை வைத்துக்கொள்வதாலும் இந்த வைரஸ் தொற்று அதிகளவில் காணப்படுகிறது. மேலும் ஒருவர் பலருடன் பாலியல் தொடர்பு கொள்வதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதுபோன்று பெண்கள் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள பெண்களுக்கு இந்த புற்றுநோய் பரவ அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த கர்ப்பப்பைவாய் புற்றுநோய் வருவதற்கு முன்பே கண்டறியக் கூடிய ஸ்கீரினிங் முறை இருக்கிறது. அல்லது ஆரம்பகட்டத்திலேயே கண்டறிய முடியும். அதற்கு பாப்ஸ்மியர்(papsmear) என்ற சோதனை முறை உதவுகிறது. இந்த புற்றுநோயை பொறுத்தவரை, பொதுவாக திருமணத்துக்கு பின்புதான் ஏற்படும் என்பதால், திருமணம் ஆனதில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பாப்ஸ்மியர் சோதனையை செய்து கொள்ளலாம் அல்லது 30 வயதை கடந்த பெண்கள் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை இந்த சோதனை செய்துகொள்ளலாம்.

மகப்பேறு மருத்துவரே இந்த சோதனையை செய்து என்ன நிலை என்பதை சொல்லுவார். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், பின்னாளில் இந்த புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் இந்த சோதனை மூலம் கண்டறியமுடியும். இந்த பாப்ஸ்மியர் சோதனை கூடவே, எச்.பி.வி டிஎன்ஏ டெஸ்ட்டும் செய்யப்படும். இதுவும், பின்னாளில் புற்றுநோய் வருவதற்கான அறிகுறி தென்பட்டாலும், இந்த சோதனையில் தெரிந்துவிடும்.

இந்த இரண்டு டெஸ்ட்டுகளையும் செய்து கொண்டபின், அதில் நெகட்டீவ் என்று வந்தால், அவர்கள் மூன்றாண்டுக்கு ஒருமுறை என்பதை 5 ஆண்டுக்கு ஒருமுறையாக மாற்றிக் கொள்ளலாம். அதுபோன்று வேறு எந்த புற்றுநோயையும் தடுப்பூசி மூலம் தடுக்க முடியாது. ஆனால், உலகிலேயே தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய ஒரே புற்றுநோய் இதுதான். அது எச்.பி.வி தடுப்பூசிதான்.இந்த தடுப்பூசி எப்படி குழந்தை பிறந்ததும், அம்மை நோய் தாக்காமல் இருப்பதற்கும், போலியோ தாக்காமல் இருப்பதற்கும் தடுப்பூசி போடுகிறோமோ அதுபோன்று 9-13 வயதில் பெண் குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசியாகும். எனவேதான், இந்த தடுப்பூசியும் குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இது இரு பாலருக்குமே கொடுக்கப்படும். பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படாமல் இருக்கவும். ஆண்பிள்ளைகளுக்கு பின்னாளில் மலக்குடல் புற்றுநோய் ஏற்படாமல் இருக்கவும் போடப்படுகிறது. ஒருவேளை அந்த வயதில் இந்த தடுப்பூசியை போட முடியாதவர்கள் அல்லது போட மறந்தவர்கள் திருமணத்துக்கு முன்பாவது இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வது நல்லது.

9-13 வயதிற்குள் 2 டோஸ் தடுப்பூசி போடப்படும். அதுவே 20 வயதில் போடுவதாக இருந்தால் 3 டோஸ் போடப்படும். பொதுவாக இந்த புற்றுநோயை பொறுத்தவரை வராமலும் தடுக்க முடியும். அதுதான் வரும்முன் காப்போம் என்ற வகையில் இளம் வயதிலேயே தடுப்பூசியை போட்டுக்கொள்வது. அதுவே வந்துவிட்டாலும், ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டோம் என்றால் முற்றிலுமாக குணப்படுத்திவிடவும் முடியும்.

எனவே, ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த எச்.பி.வி தடுப்பூசி குறித்தும், பாப்ஸ்மியர் சோதனை குறித்தும் விழிப்புணர்வு கட்டாயமாக இருக்க வேண்டும். அப்போதுதான் வரும்காலங்களில் இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோயை களைந்தெறிய முடியும். இதற்காகதான், மருத்துவ உலகம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முழுவதையுமே கர்ப்பப்பைவாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடித்து வருகிறது.

The post கர்ப்பப்பைவாய் புற்றுநோய் அறிவோம்! appeared first on Dinakaran.

Tags : Kuncumum ,Dr. ,Dinakaran ,
× RELATED மண்பானை குடிநீரின் நன்மைகள்!