×

இந்து சமய அறநிலையத்துறையில் 60 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் அமைச்சர் சேகர் பாபு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (30.01.2024) ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் (நிலை – 3) பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 60 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செயல் அலுவலர் (நிலை-3) பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 66 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் வகையில் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் 6 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் 60 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இந்து சமய அறநிலையத்துறையில் 705 அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 24 செயல் அலுவலர்கள் (நிலை -1), 66 செயல் அலுவலர்கள் (நிலை – 3), 2 செயல் அலுவலர்கள் (நிலை -4), 80 இளநிலை உதவியாளர்கள், 100 தட்டச்சர்கள் மற்றும் 32 சுருக்கெழுத்துத் தட்டச்சர்கள் என 244 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையிலான பணி நியமனங்களில் துறையில் 24 நபர்களுக்கும், திருக்கோயில்களில் 102 நபர்களுக்கும், பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதோடு, 110 விதியின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 1,287 பணியாளர்கள் பணிவரன்முறைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், செயல் அலுவலர் (நிலை -4) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 61 நபர்களுக்கு முதலமைச்சர் விரைவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

திருக்கோயில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், சொத்துக்களை பாதுகாத்து பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வரும் செயல் அலுவலர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பிட திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இன்றைய தினம் பணி நியமன ஆணைகளை பெற்றுள்ள செயல் அலுவலர்கள் எல்லாம் நிலையிலும் இந்த அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் நற்பெயரை ஈட்டி தருகின்ற வகையில் செயலாற்றிட வேண்டும் என கேட்டுக் கொண்டு மனமார்ந்த வாழ்த்துக்களை முதலமைச்சர் சார்பிலும், என் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆட்சியை பொறுத்தளவில் மக்கள் நலனுக்கு ஏற்ற வகையில், சென்னை போக்குவரத்து நெரிசலை குறைத்திட திட்டமிட்டு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம். போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் காவலர்களுடன் ஊர்க்காவல் படையினரையும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கிளாம்பாக்கத்தில் புதிய காவல் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கிளாம்பாக்கத்தில் புதிய இரயில் நிலையம் அமைக்க இரயில்வே துறைக்கு ரூ.20 கோடி அளித்திருக்கின்றோம். ரூ.120 கோடி மதிப்பீட்டில் ஆகாய நடைமேம்பாலம் அமைத்திட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதற்கு இயக்கப்பட்டுள்ளன. கூடுதல் பேருந்துகள் தேவைப்பட்டாலும் இயக்குவதற்கு தயாராக உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிதாக ஒரு கட்டமைப்பை உருவாக்கி திட்டத்தை செயல்படுத்துகின்ற போது சிறிய அளவிலான பிரச்சனைகள் எழுவது இயல்பான ஒன்று. அப்பிரச்சனைகள் அனைத்தையும் விரைவில் தீர்ப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பாரிமுனை மற்றும் எழும்பூரிலிருந்து கோயம்பேட்டிற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டபோது, முழுமையாக பேருந்துகள் இயக்கப்படுவதற்கு 6 ஆண்டுகள் ஆனது. ஆனால் தற்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை தொடங்கி வைத்த ஒரு மாதத்திற்குள் ஆம்னி பேருந்துகள் உள்பட அனைத்து பேருந்துகளையும் அங்கிருந்து இயக்குகின்ற வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசின் துரித நடவடிக்கைக்கு இதுவே எடுத்துக்காட்டாகும்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் கழிவறைகள் கூடுதலாகவே அமைக்கப்பட்டு, அவற்றை பராமரிக்கவும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தனியார் உணவகங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆவின் மூலம் 2 ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் மலிவு விலை உணவகத்தை ஏற்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்குண்டான அடிப்படை பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. அவசர மருத்துவ உதவிக்கு மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டு கட்டணமில்லாமல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மருந்து, மாத்திரைகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயணிகளின் அனைத்து பிரச்சனைகளையும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், போக்குவரத்துத் துறையும் இணைந்து முழுமையாக தீர்த்து வைப்போம்.

கோயம்பேடு பேருந்து நிலையமானது 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் மக்களுக்கு பயன்படும் கட்டமைப்புகளோ, திட்டமோ செயல்படுத்தும்போது, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 6 ஏக்கரில் நீரூற்று பூங்காவும், 11 ஏக்கரில் காலநிலை பூங்காவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது போல் கோயம்பேட்டிலும் பசுமை பூங்கா ஏற்படுத்தப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தை பொறுத்தளவில் தற்போது தனியார் ஆலோசனை நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளோம். அதன் இறுதி அறிக்கை வந்தவுடன் முழுமையாக கூர்ந்து ஆய்வு செய்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய உத்தரவு பெற்று மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகுதான் எவ்வித முடிவும் எடுக்கப்படும்.

கோயம்பேடு மார்க்கெட் நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு ஒரு லட்சம் வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் நிலையில் அங்கு கூடுதல் காவலர்களும், தூய்மைப் பணியாளர்களும் நியமனம் செய்து சிறப்பாக பாராமரித்து வருகின்றனர் என்று தெரிவித்தர்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., ஆணையர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், இ.ஆ.ப., ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் ச.இலட்சுமணன், பொ.ஜெயராமன் மற்றும் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

The post இந்து சமய அறநிலையத்துறையில் 60 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் அமைச்சர் சேகர் பாபு appeared first on Dinakaran.

Tags : Minister Shekhar Babu ,Hindu Religious Charities Department ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Minister for ,Hindu ,Religious Charities ,P.K.Sekharbabu ,Religious Charities Executive Officer ,Tamil Nadu Public Service Commission ,Commissioner's Office ,Minister ,Shekhar Babu ,Religious Endowment Department ,
× RELATED உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி...