×

பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்: முடித்தலை கிராமமக்கள் மனு

 

விருதுநகர், ஜன.30: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சாத்தூர் அருகே எம்.நாகலாபுரம் ஊராட்சியை சேர்ந்த முடித்தலை கிராம மக்கள் நேற்று மனு அளித்தனர். மனுவில், முடித்தலை கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவற்றில் இருந்து 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் நென்மேனி, சாத்தூர் அரசு பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். தற்போது இருக்கன்குடி ஆற்றில் தண்ணீர் திறப்பால் பள்ளிகளுக்கு 3 கி.மீ தூரம் உள்ள வன்னிமடை சென்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.

ஆற்றின் வழி நென்மேனி பள்ளிகளுக்கு செல்ல முடியவில்லை. கிராமத்தில் 10 முதல் பிளஸ் 2 வரை பயிலும் குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், பள்ளி செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால் மாணவ, மாணவியர் படிப்பு பாதிப்படைந்து வருகிறது. சாத்தூரில் இருந்து வன்னிமடை சென்று வரும் அரசு பஸ்சை முடித்தலை ஊர் வரை வந்து செல்ல உத்தரவிட வேண்டும். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் பயன்பெற வழி கிடைக்கும்.

மேலும் ரேசன் பொருட்களை எம்.நாகலாபுரம் சென்று வாங்கி கொள்ளும்படி கூறுகின்றனர். நாகலாபுரம் செல்ல உரிய பாதை வசதி இல்லை. ஆற்றில் தண்ணீர் போகும் நிலையில் பல கி.மீ தூரம் சுற்றி சென்று ரேசன் பொருட்களை வாங்க முடியாத நிலை உள்ளது. பஸ் வசதியும் இல்லாத நிலையில் ரேசன்பொருட்களை முடித்தலை கிராமத்தில் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

The post பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்: முடித்தலை கிராமமக்கள் மனு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,M. Nagalapuram ,Chatur ,Manu ,Nenmeni ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...