×

மூணாறு ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: வாக்கெடுப்பு இன்று நடக்கிறது

 

மூணாறு, ஜன. 30: மூணாறு ஊராட்சி தலைவர் ஜோதி சதீஷ்குமார் மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கான வாக்கெடுப்பு, இன்று (ஜன.30) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மூணாறு ஊராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இவற்றின் உறுப்பினர்களில் இருவரின் பதவி கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் ஏற்கனவே பறிக்கப்பட்டது. இதனால் தற்போது 19 கவுன்சிலர்கள் மட்டுமே உள்ளனர். இதில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் 11 பேர். அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்கள் உள்ளனர்.

மூணாறு பஞ்சாயத்து தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், சில மாதங்களுக்கு முன்பு குலுக்கல் முறையில் நடந்தது. அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ஜோதிசதீஷ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால், பஞ்சாயத்து தலைவர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று அக்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பஞ்சாயத்து தலைவர் ஜோதிசதீஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றக்கோரி ஊராட்சி மன்ற கூட்டத்தில் நோட்டீஸ் வழங்கினர்.

இதன்படி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று (ஜன.30) நடைபெற உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 4 முறை மூணாறு ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடந்துள்ளது. இந்த முறை நடக்கும் வாக்கெடுப்பில் மூணாறு ஊராட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கைப்பற்றும் என்று வட்டார காங்கிரஸ் தலைவர் விஜயகுமார், மண்டல தலைவர் நெல்சன், காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் ஆகியோர் கூறியுள்ளனர்.

The post மூணாறு ஊராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: வாக்கெடுப்பு இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Munnar Panchayat ,Munnar ,Congress ,president ,Jyoti Satishkumar ,Kerala ,Dinakaran ,
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு