×

கீழக்கரை பகுதியில் பிளக்ஸ் பேனர்கள் வைத்தால் நடவடிக்கை: தாசில்தார் எச்சரிக்கை

 

கீழக்கரை, ஜன.30: அனுமதி இன்றி கீழக்கரை பகுதியில் பிளக்ஸ் பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கீழக்கரை தாசில்தார் எச்சரிக்கை செய்துள்ளார். கீழக்கரை முக்கு ரோடு மற்றும் தில்லையேந்தல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஈ.சி.ஆர்.சாலை பகுதியில் விபத்துகளை ஏற்படுத்தும் அளவில் விளம்பர பேனர்கள் வைப்பது நாளடைவில் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் கூறுகையில், கீழக்கரை முக்கு ரோட்டு பகுதியில் சிலர் சுய விளம்பரத்திற்காக வணிக வியாபாரம், கல்வி, அரசியல், நினைவு அஞ்சலி, கண்ணீர் அஞ்சலி போன்ற விளம்பர பிளக்ஸ் பேனர் மற்றும் சாலையில் விளம்பர போர்டுகள் வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்படுவதுடன் வாகன ஓட்டிகள் கவனங்கள் சிதறி விபத்துகள் ஏற்படும் நிலை இருந்து வருகிறது. எனவே அனுமதி இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் பொது இடங்களில் பிளக்ஸ் பேனர் வைப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கடந்த 2018ம் ஆண்டு சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விளம்பர பேனர் விழுந்து ஒரு பெண் உயிரிழந்தார். அதனை அடுத்து விளம்பர பேனர்கள் வைப்பதற்கு தமிழகம் முழுவதும் ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. நாளடைவில் கீழக்கரை பகுதியில் பிளக்ஸ் பேனர்கள் அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பொது இடங்களில் பிளக்ஸ் பேனர் மற்றும் விளம்பர போர்டுகள் போக்குவரத்திற்கு இடையூறாக வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மீறினால் விளம்பர பேனர் மற்றும் போர்டுகள் பறிமுதல் செய்வதோடு வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறினார்.

The post கீழக்கரை பகுதியில் பிளக்ஸ் பேனர்கள் வைத்தால் நடவடிக்கை: தாசில்தார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tahsildar ,Geezalkarai ,Keejakarai Mukku Road ,ECR ,Thillayendal Panchayat ,Keejakarai ,Dinakaran ,
× RELATED திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல்..!!