×

பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 12 பள்ளி குழந்தைகள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதி பெரணமல்லூர் அருகே

பெரணமல்லூர்: பெரணமல்லூர் அருகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 12 பள்ளி குழந்தைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த கெங்காபுரம் பகுதியில் சமத்துவபுரத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 25 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று வழக்கம்போல் சமையலர் மேகலா சேமியா உப்புமாவை மாணவர்களுக்கு செய்து பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது அதில் பல்லி விழுந்து இருப்பதை பார்த்த மாணவர்கள் சமையலருக்கு தெரிவித்தனர். உடனடியாக வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காலை சிற்றுண்டி சாப்பிட்ட 12 மாணவர்களை அழைத்துச் சென்றனர். அங்கு வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார் முதலுதவி அளித்து உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்க வலியுறுத்தினார். அனைவரும்ம் வேன் மூலமாக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவர் கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பள்ளிக்கு சென்ற மருத்துவ குழுவினர் மாணவர்கள் சாப்பிட்ட சேமியா மற்றும் குடிநீர் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

The post பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 12 பள்ளி குழந்தைகள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதி பெரணமல்லூர் அருகே appeared first on Dinakaran.

Tags : Peranamallur ,Thiruvannamalai District ,Kengapuram ,Panchayat Union Primary School ,
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...