×

தொகுதி அறிவித்ததில் தள்ளுமுள்ளு மேடையில் விழுந்த சந்திரபாபுவை தாங்கிப் பிடித்த பாதுகாவலர்கள்: பொதுக்கூட்டத்தில் திடீர் பரபரப்பு

திருமலை: ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சியும் கூட்டணியில் உள்ளன. இந்நிலையில் அரக்கு, மந்தப்பேட்டை தொகுதிகளுக்கு சந்திரபாபு நாயுடு, அவரது கட்சி சார்பில் வேட்பாளர்களை அறிவித்தார். தொடர்ந்து கடந்த 26ம் தேதி குடியரசு தினவிழாவில் பேசிய நடிகர் பவன்கல்யாண், சந்திரபாபு கூட்டணி கொள்கையை மீறி கலந்தாலோசிக்காமல் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். எனவே ஜனசேனா கட்சி சார்பில் ராஜா நகரம், ராஜுலு தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என அறிவித்தார்.

இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியில் உள்ள கத்தேருவில் ‘ரா கதலிரா’ எனும் தெலுங்கு தேச கட்சி பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டணி கட்சியான ஜனசேனா கட்சி ராஜாநகரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி பொட்டு வெங்கடரமணா ஆதரவாளர்கள் மேடையில் ஏறி எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அனைவரும் கீழே இறங்க முயன்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சந்திரபாபு நாயுடு மேடையில் இருந்து கீழே விழ இருந்தார். ஆனால் பாதுகாப்பு பணியாளர்கள் தாங்கி பிடித்ததால், விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் மேடையில் இருந்தவர்கள் கீழே இறங்கும்படி சந்திரபாபு நாயுடு கோபத்துடன் தெரிவித்தார். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, அமராவதி உள்வட்ட சாலை முறைகேடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி ஆந்திரா அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

The post தொகுதி அறிவித்ததில் தள்ளுமுள்ளு மேடையில் விழுந்த சந்திரபாபுவை தாங்கிப் பிடித்த பாதுகாவலர்கள்: பொதுக்கூட்டத்தில் திடீர் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chandrababu ,Tirumala ,Former ,Chief Minister ,Chandrababu Naidu ,Telugu Desam Party ,Pawan Kalyan ,Janasena Party ,Andhra Pradesh ,Araku ,Mandappettai ,
× RELATED ஜெகன்மோகனுக்கு பாடம் புகட்ட வேண்டும்;...