×

பீகாரில் அடுத்தகட்டமாக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பாட்னா: பீகாரில் ஜேடியு, பாஜ கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையாக ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த சட்டப்பேரவை சபாநாயகரை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் முதல்வர் பதவியை நேற்று முன்தினம் காலையில் ராஜினாமா செய்தார். உடனேயே பாஜவுடன் புதிய கூட்டணி அமைத்து, மாலையிலேயே 9வது முறையாக முதல்வர் பதவி ஏற்றார். அவருடன் 2 துணை முதல்வர்கள் உட்பட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

புதிய ஆட்சி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நிகழ்வாக அமைச்சரவை விஸ்தரிப்பு மற்றும் ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த சபாநாயகர் அவத் பிகாரி சவுத்ரியை நீக்கும் நடவடிக்கையை நிதிஷ், பாஜ கூட்டணி தொடங்கி உள்ளது. இதற்காக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை பாஜ வழங்கி உள்ளது. அதே சமயம் நேற்று காலை முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் புதிய அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சபாநாயகர் நீக்கப்படும் பட்சத்தில், இப்பதவியை பாஜவுக்கு தர நிதிஷ் சம்மதித்துள்ளார். இதற்கிடையே நிதிஷ் குமார் வெளியேறியதால் இந்தியா கூட்டணியில் எவ்வித தாக்கமும் இல்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார்.

The post பீகாரில் அடுத்தகட்டமாக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Bihar ,Patna ,JD ,U)- ,BJP ,government ,Speaker of the Legislative ,Assembly ,Rashtriya Janata Dal ,RJD ,Congress ,Dinakaran ,
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!