×

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர் புறக்கணிப்பு

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 34வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு 348 பேருக்கு பட்டம் வழங்கினார். 166 பேருக்கு ஆய்வாளர்கள் பட்டம், பல்கலைக்கழக பல்வேறு துறைகளில் படித்த 1,863 மாணவர்கள், இணைப்புக்கல்லூரிகளில் படித்த 12,389 மாணவர்கள், இணைவுக் கல்வித் திட்டத்தில் படித்த 4,181 பேர், தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் வாயிலாக படித்த 21,443 மற்றும் இணையவழிக் கல்வியில் படித்த 472 மாணவர்கள் என மொத்தம் 40,414 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.

பட்டமளிப்பு விழா முடிந்ததும், அங்குள்ள அறிவியல் வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சிலையை திறந்து வைத்தார். மேலும், தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுடன், பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசிய நிகழ்விலும் கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்துள்ளார். அவர் அரசு நிகழ்ச்சி மற்றும் சென்னையில் நாடாளுமன்ற தொகுதி குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதால் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி கலந்து கொள்ளவில்லை.

* ஆளுநருக்கு கருப்புக்கொடி எம்எல்ஏ உட்பட 80 பேர் கைது
ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஓவியங்கள், சமணர் படுகை என முக்கியத்துவம் பெற்ற சித்தன்னவாசலை பார்க்க திட்டமிட்டு இருந்தார். இந்த தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கந்தர்வகோட்டை தொகுதி எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் இ.கம்யூ, காங்கிரஸ், மதிமுகவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி மற்றும் பலூன்களுடன் புதுக்கோட்டை கட்டியாவயலில் திடீர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக ஆளுநரின் புதுகை பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் பிற்பகல் 2 மணிக்கு தெரிவிக்கப்பட்டது.

The post காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister boycotts graduation ceremony ,Governor ,Karaikudi Aghappa University ,Karaikudi ,34th Graduation Ceremony ,Karaikudi Alagappa University ,Sivaganga District ,University ,Chancellor ,R. N. Ravi ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...