×

புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் சென்ற முதல்வரை இந்திய தூதர் வரவேற்றார்

சென்னை: புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்திய தூதர் வரவேற்றார். தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு கடந்த 27ம்தேதி இரவு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டு, நேற்று முன்தினம் மாலை ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் சென்றடைந்தார்.

மாட்ரிட் விமான நிலையத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக், தூதரக அதிகாரிகளோடு வந்து மலர்கொத்து வழங்கி வரவேற்றார். அப்போது அவர் முதல்வரிடம், ஸ்பெயின் பயணம் வெற்றி பெறுவதற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உடனிருந்தார்.

ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் இன்று நடத்த உள்ளார். இம்மாநாட்டில் தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பம்சங்களை விளக்கி, தமிழ்நாட்டில் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகளை கூறி முதலீடுகளை ஈர்ப்பேன்: ஸ்பெயினில் மு.க.ஸ்டாலின் வலைதளபதிவு

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: ஸ்பெயின் வந்தடைந்தேன். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பிய பயணம். ஸ்பெயின் நாட்டிற்கான இந்திய தூதர் தினேஷ் கே. பட்நாயக் தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார். இன்று மாலை ஸ்பெயின் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன். தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் சென்ற முதல்வரை இந்திய தூதர் வரவேற்றார் appeared first on Dinakaran.

Tags : Ambassador ,Spain ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu government ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED போட்டோ எடுக்கக்கூடாதா? நான் ஓட்டே போட...