×

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 134 இறால் பண்ணைகளை மூட உடனடி நடவடிக்கை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில், சட்ட விதிகளுக்கு முரணாக, உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த இறால் பண்ணைகளை மூடும்படி மீன்வளத்துறை உதவி இயக்குநர் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து இறால் பண்ணைகளின் உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் குமரேசன், மத்திய அரசின் கடலோர மீன்வளர்ப்பு ஆணைய சட்டத்தில் கடலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்குள் தான் இறால் பண்ணைகளை அமைக்க வேண்டும்.

மனுதாரர்களின் இறால் பண்ணைகள் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளன. உரிய அனுமதிகளை பெறாமல் இந்த பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த பண்ணைகளை மூட உத்தரவிடப்பட்டது. தமிழகம் முழுவதும் 2,709 இறால் பண்ணைகள் உள்ளன. அவற்றில் 2,227 பண்ணைகள் மட்டும் பதிவு செய்யப்பட்டவை. 348 பண்ணைகளின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. 134 பண்ணைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டு, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அனுமதியின்றி செயல்பட்ட இறால் பண்ணைகளை மூடும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. சட்டவிரோதமாக செயல்பட்ட 134 இறால் பண்ணைகளை மூட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக இறால் பண்ணை நடத்தியவர்களுக்கு எதிராக 6 வாரங்களில் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கத் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

The post தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 134 இறால் பண்ணைகளை மூட உடனடி நடவடிக்கை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Assistant Director of ,Fisheries ,Kummidipoondi taluk ,Tiruvallur district ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...