×

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

சென்னை: ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நேற்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தமிழகத்தை 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்துவதை இலக்காக கொண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக ஏற்கனவே ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று அதன் வாயிலாக தமிழ்நாட்டில் பல்வேறு தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த ஜனவரி 7, 8ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் மொத்தம் ரூ.6,64,180 கோடிக்கான 631 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மாநாட்டில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளின் நிறுவனங்களும், தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினுக்கு செல்வார் என்று கூறப்பட்டது. அதன்படி ஸ்பெயினுக்கு கடந்த 27ம் தேதி இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் அரசு முறை பயணமாக அவர் புறப்பட்டார்.

ஸ்பெயின், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 8 நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் அவரை வழியனுப்பி வைத்தனர். துபாய் வழியாக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டை அடைந்தார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதர் தினேஷ் பட்நாயக், தூதரக அதிகாரிகளுடன் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.

பின்னர் ஸ்பெயின் நாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து தூதருடன் முதல்வர் பேசினார். பின்னர் ஸ்பெயினில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில் முதலீட்டாளர் மாநாட்டில் முதலீடுகளை ஈர்ப்பது பற்றி பேசுவதாக குறிப்பிட்டார். இதை தொடர்ந்து தலைநகர் மாட்ரிட்டில் நேற்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்றார். அவருடன் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தொழில்துறை ஆணையர் விஷ்ணு உள்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஸ்பெயினில் பல்வேறு முதலீட்டாளர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் உள்ள வளங்களை எடுத்துக்கூறி தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதை தொடர்ந்து முதல்வர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வருகிற பிப்ரவரி 7ம் தேதி அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின appeared first on Dinakaran.

Tags : Madrid ,Spain, BC ,K. Stalin ,Tamil Nadu ,Chennai ,MLA ,Spain ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் கார்சியா