×

காய்கறி விவசாயத்துக்கு பயன்படுத்த செயற்கை குளம் அமைத்து மழைநீர் சேகரிப்பு

ஊட்டி: நீராதாரங்கள் இல்லாத பகுதிகளில் செயற்கை குளம் அமைத்து மழை நீரை சேகரித்து காய்கறி விவசாயத்துக்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மலைகாய்கறி பயிர்களான கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைகிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.

பெரும்பாலான பகுதிகளில் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பெயக்கூடிய தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகளை நம்பியே விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்கின்றனர். மழை பெய்யும் சமயங்களில் அணைகள், தோட்டங்களில் உள்ள நீருற்றுகள், குளங்கள் நிரம்பி விடும். மழை இல்லாத நேரங்களில் குளங்களில் தேங்கிய தண்ணீரை மோட்டார் பயன்படுத்தி காய்கறி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.

ஆனால் சரிவான பகுதிகளில் தண்ணீர் வசதி இல்லாத விவசாயிகள் முழுமையாக மழையை நம்பியே விவசாயம் மேற்கொள்கின்றனர். பற்றாகுறை நேரங்களில் பயிர்களை பாதுகாக்க லாாி மூலம் தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் நீர்ராதாரம் இல்லாத தங்களது நிலங்களில் விவசாயிகள் மழைக்காலங்களில் செயற்கையாக குளம் அமைத்து அதில், பிளாஸ்டிக் போர்வை கொண்டு போர்த்தி மழைநீரை சேமித்து வைத்து கொள்கின்றனர். மழை இல்லாத நேரங்களில் சேமித்து வைத்த தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். கோடை காலம் துவங்க உள்ள நிலையில் விவசாய நிலங்களில் இவ்வகை செயற்கை குளங்கள் அதிகளவு அமைக்கப்பட்டுள்ளது.

The post காய்கறி விவசாயத்துக்கு பயன்படுத்த செயற்கை குளம் அமைத்து மழைநீர் சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Dinakaran ,
× RELATED அதிக மழைப்பொழிவு இருக்கும் போது...