×

ரோகித் ஷர்மாவின் கேப்டன்சி சுமாராக இருந்தது: இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சனம்

லண்டன்: ரோகித் ஷர்மாவின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்தது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 231 ரன்களை துரத்திய இந்திய அணி 202 ரங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சொந்த மண்ணில் இந்திய அணியின் தோல்வி கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரோகித் ஷர்மாவின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்ததாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். போட்டியின் அழுத்தமான நேரத்தில் பீல்டர்களை மாற்றி விக்கெட்டுகளை எடுக்கும் யுக்தி ரோகித் ஷர்மாவுக்கு தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது; “ரோகித் ஷர்மாவின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்ததாக நான் கருதுகிறேன். களத்தில் அவர் சரியான திட்டங்களை தீட்டியதாகவோ அல்லது பந்து வீச்சு மாற்றங்களில் முனைப்புடன் இருந்ததாகவோ எனக்கு தெரியவில்லை.

அதிலும் குறிப்பாக போப் அடித்த ஸ்வீப் அல்லது ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை நிறுத்துவதற்கு அவரிடம் பதில் இல்லை. ஒரு வீரர் லெக் சைட் திசையில் ஸ்வீப் அடிக்கும்போது ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஷேன் வார்னே அரவுண்ட் தி விக்கெட் திசையில் சென்று அவுட்டாக்க முயற்சிப்பார். ஆனால் அப்படி இந்திய அணியிலிருந்து யாரும் முயற்சித்ததை நான் பார்க்கவில்லை.

அது இங்கிலாந்துக்கு மிகவும் எளிதாக அமைந்தது. அதை பயன்படுத்தி இங்கிலாந்து எளிதாக பவுண்டரிகள் அடித்தது. அப்போது பீல்டர்களை பரவலாக நிறுத்திய ரோகித் சர்மா எங்களுடைய பவுலர்கள் சிறப்பான பந்துகளை வீசியும் அடி வாங்குகிறார்கள் என்பதுபோல் செயல்பட்டார்” என்று கூறினார்.

The post ரோகித் ஷர்மாவின் கேப்டன்சி சுமாராக இருந்தது: இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Rohit Sharma ,England ,Michael Vaughan ,London ,India ,Dinakaran ,
× RELATED ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக...