நன்றி குங்குமம் டாக்டர்
உபகாரத்தில் பெரிய உபகாரமே உயிருக்குப் போராடுபவர்களைக் காப்பாற்றுவதுதான். இங்கு நம்மில் பலருக்கும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனது இருந்தாலும் ஆபத்து காலங்களில் எப்படிச் செயல்பட வேண்டும். என்ன மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய அறிதல் இருப்பது இல்லை. இதனால் சில சமயங்களில் நம் கண் முன்னேயே சக மனிதர்கள் கஷ்டப்படுவதையும்; மரிப்பதையும் பார்த்திருக்கும் கொடுமை நேர்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேரில் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் போதிய முதலுதவி கிடைக்காமல் இறந்துபோகிறார்கள் என்று கவலை தெரிவிக்கிறது ‘உலக சுகாதார நிறுவனம்’. ஆபத்து காலங்களில் ஒருவருக்குச் செய்ய வேண்டிய முதலுதவி என்ன? அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
திடீர் இதயத் துடிப்பு முடக்கம் (Suddern cardiac arrest)ஹார்ட் அட்டாக் என்னும் மாரடைப்புக்கும் சடர்ன் கார்டியாக் அரெஸ்ட் என்னும் திடீர் இதயத்துடிப்பு முடக்கத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. மாரடைப்பை விடவும் திடீர் இதயத் துடிப்பு முடக்கம் தீவிரமான பிரச்னை. இது, ஏற்பட்டால் அடுத்த சில நிமிடங்களிலேயே மரணம்தான். அறிகுறியே தெரியாது. மாரடைப்பா திடீர் இதயத் துடிப்பு முடக்கமா… எப்படிக் கண்டுபிடிப்பது?
திடீரென ஒருவர் நம் கண் முன் நிலைகுலைந்து விழுந்து சுயநினைவை இழக்கிறார் எனில் அது திடீர் இதயத் துடிப்பு முடக்கமாக இருக்கக்கூடும். அவரது கையில் நாடிபார்ப்பது, இதயத்துக்கு அருகில் காதைவைத்துச் சத்தம் கேட்கிறதா எனச் சோதனை செய்வது எல்லாம் நேரத்தை வீணாக்கும் செயல். ஒருவருக்குத் திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டால், அவர் உயிரிழக்க ஒவ்வொரு நிமிடமும் 10 சதவிகிதம் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதாவது, 10வது நிமிடம் அவர் மரணமடையக்கூடும். எனவே, உணர்ச்சியே இல்லையெனில் உடனடியாக சி.பி.ஆர் (Cardio pulmonary Resuscitation) எனும் முதலுதவியைச்செய்ய வேண்டும்.
சி.பி.ஆர் (Cardio pulmonary Resuscitation)
சி.பி.ஆர் என்பது இதயத்துக்கு செயற்கையாக சுவாசமூட்டும் முறை. பாதிக்கப்பட்டவரை ஒரு சமதளத்தில் உடனடியாகப் படுக்கவைக்கவும். அவரைச் சுற்றிக் கூட்டம் போட வேண்டாம். காற்றோட்டம் இருக்கட்டும். முதலில் அவரது சட்டை பட்டன்களைக் கழட்டவும்.இரண்டு மார்பு எலும்புகளும் இணையும் நெஞ்சுக்குழியில் உள்ளங்கையின் அடிப்பாகத்தை வைத்து இன்னொரு கையை அந்தக் கையின் மேல் வைத்து இருகை விரல்களையும் கோர்த்துக்கொள்ள வேண்டும்.
இரு கைகளாலும் பாதிக்கப்பட்டவரின் நெஞ்சில் ஆழமாகவும் வேகமாக அழுத்தம் கொடுத்து, மீண்டும் ரிலீஸ் செய்யவேண்டும். ஒரு நிமிடத்துக்கு கிட்டத்தட்ட 100 முறை அழுத்தம் கொடுத்து ரிலீஸ் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கான சி.பி.ஆர்குழந்தைகளுக்கு, நெஞ்சுப் பகுதியில் கையின் அடிப்பகுதியை வைத்து அழுத்தம் கொடுக்கக் கூடாது. குழந்தைப் பேச்சுமூச்சின்றி உணர்வில்லாமல் இருந்தால், குழந்தையின் நெஞ்சுப்பகுதி இரண்டுப்புறமும் கைவைத்து தூக்கி, இரண்டு கட்டை விரல்களாலும் மிதமாக அழுத்தம் கொடுக்கவும். ஒரு நிமிடத்துக்குள் 30 தடவை அழுத்தம் கொடுத்து ரிலீஸ் செய்ய வேண்டும், 30 தடவைக்கு இரண்டு முறை வீதம் வாய் மேல் வாய் வைத்து மூச்சுக்காற்றை ஊதி, செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்.
மாரடைப்பு
மாரடைப்பு ஏற்படுகிறது எனில், நெஞ்சுப் பகுதியில் ஒருவிதமான பாரம் இருக்கும். நெஞ்சுப்பகுதி மட்டும் இன்றி கழுத்துப் பகுதி, இடது கைப்பகுதிகளில் வலி ஏற்படும், வியர்த்துக் கொட்டும், வேகமாக மூச்சு வாங்கும். இவை மாரடைப்பின் சில அறிகுறிகள். சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு இந்த அறிகுறிகள் தென்படாது போகவும் வாய்ப்பிருக்கிறது. வீட்டில் எப்போதும் ஆஸ்பிரின் மாத்திரையை வைத்துக்கொள்வது நல்லது. நமது ஊரில் ஆஸ்பிரின், 75 மி.கி அளவு கொண்ட மாத்திரை கிடைக்கிறது. ஆஸ்பிரினில் கடித்துச்சாப்பிடும் வகையாக, டிஸ்பிரின் என்ற மாத்திரையும் இருக்கிறது, குளோப்பிடோகிரல் என்ற மாத்திரையும் வைத்துக்கொள்ளவேண்டும். மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால் ஆஸ்பிரின்/டிஸ்பிரின், குளோப்பிடோகிரல் ஆகிய இரண்டும் தலா 300 மி.கி அளவுக்கு சாப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்கு உடனடியாகச் செல்ல வேண்டும்.
ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகள், மேலும் அடைப்பு ஏற்படுவதை மட்டுமே தடுக்கும். இதனால் மாரடைப்பு மூலமாக திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டு மரணம் அடைவதைத் தடுக்க மட்டுமே முடியும். அடைப்பை சரிசெய்ய மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாரடைப்பு ஏற்படுவதன் அறிகுறிகள் தெரிந்தால் வேகமாக நடக்கவோ, படிகளில் ஏறவோ கூடாது, சோடா குடிப்பதும் தவறு. இதனால் வலி கூடுமே தவிர குறையாது.
மாரடைப்பு ஏற்பட்டால் யாரிடமாவது கன்சல்ட் செய்துவிட்டு மருத்துவமனைக்குச் செல்லலாம் என நினைத்து, தாமதப்படுத்துவது தவறு, இதயத்துக்கான மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு உடனடியாகக் சென்றால் மட்டுமே எளிதில் பிழைக்க முடியும்.
திடீர் மூச்சுக்குழாய் அடைப்பு
உணவு உண்ணும்போதோ அல்லது திடீரென்றோ சிலருக்கு மூச்சுக்குழாய் அடைத்துகொள்ளும். ஒருவருக்கு மூச்சுக்குழாய் அடைத்துக்கொண்டால், அதை சுட்டிக்காட்ட தானாகவே கழுத்துப் பகுதிக்குக் கைபோகும். இந்த சமிக்ஞையை ‘யுனிவர்சல் சைன்’ என்பார்கள். திடீரென தங்கள் கழுத்துப் பகுதியில் கைவைத்தபடி யாராவது தவித்துக்கொண்டிருந்தால் அது திடீர் மூச்சுக் குழாய் அடைப்பாய் இருக்கக்கூடும்.
அவரிடம் மூச்சுக்குழாய் அடைத்திருக் கிறதா என முதலில் கேட்க வேண்டும். அவர் கஷ்டப்பட்டு ஆமாம் என்று சொன்னால் நன்றாக இருமச் சொல்லுங்கள். அதிலேயே குணமாகக்கூடும். ஒருவேளை அவரால் பேச இயலாமல் செய்கையால் ஆமாம் என்று சொன்னால் ஹெமிலிச் மேனியூவர் (Hemilich maneuver) எனும் முதலுதவியைச் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவருக்குப் பின்புறம் நின்றுகொள்ளவும். அவரது தொப்புள் பகுதியில் இடது கையை குத்துவது போல வைக்கவும், தற்போது, வலது கையை இடது கையின் மேல் வைத்து, வயிற்றுப்பகுதியில் இருந்து நன்றாக மேல்நோக்கி அழுத்தம் தரவும்.
இப்படி அழுத்தம் தரும்போது, மூச்சுக் குழாயில் அடைத்துக்கொண்டிருக்கும் உணவு, வெளியே வந்துவிடும். முதலுதவி கொடுக்கத் தாமதப்படுத்தினால் இரண்டு மூன்று நிமிடங்களில் இதயத்துடிப்பு நின்றுவிட வாய்ப்பு இருக்கிறது என்பதால் கவனம் தேவை.
குழந்தைகளுக்கு ஏற்படும் திடீர் மூச்சுக்குழாய் அடைப்பு
குழந்தைகளுக்கு மூச்சுக்குழாயில் உணவு அடைத்துக்கொள்ளும் பிரச்னை அதிக அளவில் இருக்கும். ஏனெனில், சில குழந்தைகள் நாணயங்கள், பட்டாணி, வாழைப்பழம் போன்றவற்றை விழுங்கிவிடுவார்கள். இதற்கு, சிலர் தலைகீழாகக் குழத்தைகளைப் பிடித்துத் தட்டுவார்கள். இது தவறு; இப்படிச் செய்யக் கூடாது.ஒரு கையில் குழந்தையைச் சாய்வாகப் பிடித்துக்கொண்டு, இரண்டு விரல்களை வைத்து அதன் நெஞ்சுப்பகுதியில் ஐந்து முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். பின்னர், குழந்தையைத் திருப்பி வைத்து, உள்ளங்கையால் சில முறை முதுகில் தட்ட வேண்டும்.
மூச்சுத்திணறல் ஏற்படும்போது தலையில் தட்டுவதால் எந்தப் பயனும் இல்லை, சிலர் குழந்தையின் வாய்க்குள் விரலை விட்டு உணவுப்பொருளை வெளியே எடுக்க முயலுவார்கள். இதனால்,சில சமயம் உணவு மூச்சுக் குழாயின் உட்புறம் தள்ளிவிடப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் கவனம் தேவை.
வலிப்பு
வலிப்பு வருபவர்களுக்குச் செய்யப்படும் முதலுதவிகளில் தவறான முதலுதவிகளே அதிகம். வலிப்புவந்தால் பாதிக்கப்பட்டவரை காற்றோட்டமான சூழலில் ஒருக்களித்துப் படுக்கவைக்கவும். அதன் பின்னர் விரைவாக மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்ல வசதி செய்து தர வேண்டும். கையில் சாவி கொடுப்பது, செருப்பு கொடுப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது. வலிப்பு வரும்போது சிலர் நாக்கைக் கடிப்பார்கள். அதனைத் தடுக்க விரல்களை அவர் வாய்க்குள் வைத்து நாக்கைக் காப்பாற்ற முயல வேண்டாம் . சில சமயம் விரலே துண்டாகிவிடும். அதே போல அவரது கை, கால்கள் போன்றவற்றையும் பிடிக்கக் கூடாது. இதனால், பாதிக்கப்பட்டவருக்கு எலும்புகள் முறிவடையவும் வாய்ப்பு உள்ளது.
சோடா, குளிர்பானம் போன்றவற்றைக் கொடுக்க கூடாது. மூன்று முதல் ஆறு வயதில் உள்ள குழந்தைகளுக்கு அதிகக் காய்ச்சலால் வலிப்பு வருகிறது எனில், ஆசனவாயில் வைக்கும் பாரசிட்டமால் மாத்திரையை வைக்க வேண்டும். இல்லை எனில், மென்மையான துணியை தண்ணீரில் நனைத்து, நன்கு பிழிந்தபின் அதை குழந்தையின் நெற்றியிலும், மார்பிலும், முதுகிலும், பாதங்களிலும் வைத்து வைத்து எடுக்கவும்.குழந்தைக்கு காய்ச்சல் வராமல் வலிப்பு வருகிறது எனில், நரம்பு தொடர்பான பிரச்னையாக இருக்கக்கூடும். உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே சிறந்தது.
தீக்காயங்கள்
சிறிய அளவிலான தீக்காயங்கள், சுடுதண்ணீர் உடலில் எங்காவது படுவதால் ஏற்படும் காயங்கள், பைக் சைலன்சரில் சுட்டுக்கொள்வதால் ஏற்படும் காயங்கள் போன்றவற்றின் மீது உடனடியாக குளிர்ந்த நீரோ அல்லது சாதாரணமான தண்ணீரோ ஊற்ற வேண்டும். கொப்புளங்கள் ஏற்பட்டால், அவற்றை உடைக்கக் கூடாது. மிகச் சிறிய தீக்காயங்களுக்கு பர்னால் போன்ற சில்வர் சல்பாடயஸின் களிம்புகளே போதும்.
தீக்காயங்கள் என்றால் மாவு, மஞ்சள், பேனா மை போன்றவற்றைத் தீக்காயங்கள் மீது வைக்கக் கூடாது. குடிக்கத் தண்ணீர் கொடுப்பதும் தவறு. கம்பளி போட்டு உடலைச் சுற்றி மருத்துவமனைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஹைப்போ கிளைசிமியா
1. சர்க்கரை நோயாளிகள் சிலருக்குத் திடீரென சர்க்கரை குறைந்தால் ஹைப்பர் கிளைசிமியா எனும் பிரச்னை ஏற்பட்டு உடனடியாக மயக்கம் ஏற்படும்.
2. சிலர் வீட்டிலேயே குளுக்கோமீட்டர் வைத்து உடனடியாகப் பரிசோதித்து சர்க்கரை அளவு குறைந்தது உறுதி செய்யப்பட்டால், வாய் வழியாக சர்க்கரை பானமோ, குளுக்கோஸ் போன்றவற்றையோ கொடுக்கிறார்கள் இது தவறு. மயக்கம் அடைந்த நிலையில் இருந்தால், எந்த உணவுப்பொருளும் கொடுக்கக் கூடாது, ஏனெனில், உணவு மூச்சுகுழாயை அடைத்து, உயிருக்கே பாதிப்பு ஏற்படலாம்.
3. ஓரளவு சுயநினைவுடன் இருக்கிறார். ஆனால், மிகவும் சோர்வாக இருக்கிறார்,எதாவது சாப்பிடும் நிலையில் இருக்கிறார் என்றால் மட்டும் சர்க்கரை நிறைந்த பானங்களை உண்ணுவதற்குக் கொடுப்பதில் தவறு இல்லை.
4. சுயநினைவு இல்லாமல் மயங்கி விழுந்தால், அவருக்கு சர்க்கரை அளவு குறைந்திருக்கிறது என்பதை குளுக்கோமீட்டரில் கண்டுபிடித்து உறுதி செய்துகொண்டால் மட்டும் குளுக்ககான் என்ற ஊசியைப் போட்டு, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்..
5.சர்க்கரை நோயாளிகள் இருக்கும் வீட்டில் இந்த குளுக்ககான் ஊசியை வாங்கி வைத்துக்கொள்ளலாம். மருத்துவமனைக்கு கொண்டு வரும் இடைப்பட்ட நேரத்தில் திடீர் இதய துடிப்பு முடக்கம் ஏற்படும் வாய்ப்பு இந்த ஊசி போடுவதன் மூலம் குறைகிறது.
தொகுப்பு: இளங்கோ
The post முதலுதவி… எமர்ஜென்சி கைடு! appeared first on Dinakaran.