புதுச்சேரி: புதுச்சேரி தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த ராஜீவ் வர்மா சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் புதிய தலைமைச் செயலாளராக சரத் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் தற்போது ஆளும் கட்சியாக என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி அரசு அமைத்து ஆட்சியமைத்து வருகிறது. இதனிடையே ஆட்சி அமைத்தது முதல் புதுச்சேரி அரசு சார்பில் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தனர்.
குறிப்பாக மக்கள் நல திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கு தலைமைச் செயலாளர் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், இதேபோல் தலைமை செயலர் உள்ளிட்ட அரசு செயலர்கள் மக்கள் நல திட்டங்கள் தொடர்பாக எந்தவொரு திட்டத்தை செயல்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனவும் தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். மேலும் ஒருசில சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயலாளருக்கு எதிராக அரசு விழாவில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், புதுச்சேரி தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த ராஜீவ் வர்மா தற்போது சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் பணியாற்றி வந்த சரத் சவுகான் புதுச்சேரி தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த புதிய தலைமை செயலாளர், அரசுக்கு எப்படி ஒத்துழைப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் கோவாவுக்கு மாற்றம்:
புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் கோவாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி சவுத்ரி அபிஜித் விஜய் புதுச்சேரியில் இருந்து சண்டிகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அருணாச்சல பிரதேசத்தில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி தல்வாடே புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் அந்தமான் நிகோபாரில் இருந்து புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
The post புதுச்சேரி தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த ராஜீவ் வர்மா சண்டிகருக்கு இடமாற்றம்..!! appeared first on Dinakaran.