×

கர்நாடகா மாநிலத்தில் தேசிய கொடிக்கு பதிலாக அனுமன் கொடியை அகற்றியதால் பதற்றம்: 144 தடை உத்தரவு

பெங்களூரு: கர்நாடகாவில் அனுமன் கொடியை அகற்றியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது . இதனால் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமன் கொடியை அகற்றுவதற்காக சென்ற அதிகாரிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் கடந்த வாரம் 108 அடி உயரத்தில் கொடிக்கம்பம் நிறுவப்பட்டு அதில் அனுமன் கொடியை ஏற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கொடிக்கம்பம் வைப்பதற்கு கிராம பஞ்சாயத்து அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், தேசியக்கொடிக்கு பதிலாக அனுமன் கொடி ஏற்றப்பட்டதாக புகார்கள் வரப்பெற்றதால், அனுமன் கொடியை அகற்றும்படி அதிகாரிகளை பஞ்சாயத்து நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து அனுமன் கொடியை அகற்றுவதற்காக அதிகாரிகள் நேற்று சென்றனர். அப்போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம், பஜ்ரங் தளம் தொண்டர்களும் போராட்டத்தில் இணைந்தனர். போராட்டத்தின்போது காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகுமாரின் பேனர்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். நிலைமை மோசமடைந்ததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் அனுமன் கொடியை அகற்றிவிட்டு தேசியக்கொடியை ஏற்றினர்.

கெரகோடு கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனுமன் கொடி அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்த பாஜக மற்றும் இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. பெங்களூருவில் உள்ள மைசூரு வங்கி சதுக்கத்தில் பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி மந்திரி செலுவரயாஸ்வாமி விளக்கம் அளித்துள்ளார். கொடிக்கம்பம் உள்ள இடம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடம் என்றும், குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்றுவதற்கு அனுமதி வாங்கிவிட்டு அனுமன் கொடியை ஏற்றியதாகவும் கூறி உள்ளார். இதன் பின்னணியில் அரசியல் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post கர்நாடகா மாநிலத்தில் தேசிய கொடிக்கு பதிலாக அனுமன் கொடியை அகற்றியதால் பதற்றம்: 144 தடை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bengaluru ,Kerakode ,Mandya district, Karnataka State ,Dinakaran ,
× RELATED பாலியல் வழக்கில் சிக்கியதால்...