×

ஐதராபாத் டெஸ்ட்டில் இங்கிலாந்து அபார வெற்றி; முதல் இன்னிங்சில் 70 ரன் குறைவாக எடுத்ததே தோல்விக்கு காரணம்: ராகுல் டிராவிட் பேட்டி

ஐதராபாத்: இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா 28 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அளித்த போட்டி “4வது நாள் ஆட்டம் சவாலான ஒரு நாளாக இருந்தது. எனவே இந்திய அணி குறித்து நான் எதுவும் குறை சொல்லமாட்டேன். உண்மையில் ஏதாவது சொல்வது என்றால் நாங்கள் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தபோது 70 ரன் குறைவாக அடித்துவிட்டோம். இரண்டாம் நாளில் பேட்டிங் செய்வதற்கு நிலைமைகள் மிகவும் நன்றாக இருந்தது. நாங்கள் அப்போது நல்ல தொடக்கத்தையும் பெற்றோம். ஆனால் எங்களால் அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.

இந்த ஆடுகளத்தில் நான்காவது நாளில் 230 ரன் என்பது எடுக்க கூடிய ரன் இல்லை. இது மிகவும் சவாலான இலக்கு. எங்களுக்கு இந்த இலக்கை துரத்துவதற்கு ஒரு விதிவிலக்கான ஆட்டம் யாரிடமாவது தேவைப்பட்டது. ஆனால் யாரும் அப்படி விளையாடவில்லை. இளம் வீரர்கள் ஒயிட்பால் கிரிக்கெட் நிறைய ஆடி இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது தான் கற்றுக்கொள்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட்டில் ஆடுகளம் பவுலிங்கிற்கு சாதகமாக உள்ளது.

அதற்கு ஏற்ப பேட்ஸ்மேன்கள் மாற்றிக்கொள்வது சற்று சவாலாக உள்ளது. ஆனால் அவர்கள் திறமையை நிரூபித்துதான் அணிக்கு வருகின்றனர். உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்து, ஏ-டீம் சிறப்பாக விளையாடி இங்கு வந்துள்ளனர். எனவே, அவர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள், என்றார்.

ரோகித்சர்மா வருத்தம்: கேப்டன் ரோகித்சர்மா கூறுகையில், இந்த போட்டியில் தவறு எங்கு நடந்தது? என்று என்னால் ஒரு இடத்தை குறிப்பிட்டு கூற முடியவில்லை. இருப்பினும் 190 ரன் முன்னிலை பெற்ற பின் இப்படி ஒரு தோல்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது. 2வது இன்னிங்ஸில் நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். ஒல்லி போப் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒட்டுமொத்தமாக இந்த தோல்வி குறித்து பார்க்கையில் 2வது இன்னிங்சில் பேட்டிங்கில் நாங்கள் செய்த தவறே தோல்விக்கு காரணம், என்றார்.

The post ஐதராபாத் டெஸ்ட்டில் இங்கிலாந்து அபார வெற்றி; முதல் இன்னிங்சில் 70 ரன் குறைவாக எடுத்ததே தோல்விக்கு காரணம்: ராகுல் டிராவிட் பேட்டி appeared first on Dinakaran.

Tags : England ,Hyderabad Test ,Rahul Dravid ,Hyderabad ,India ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...