×

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழக்கில் திருப்பம்.. தனி நீதிபதி விசாரிப்பது ஏன்? :பதிவாளர் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி : தமிழக அமைச்சருக்கு எதிரான வழக்கு தொடர்பாக ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் முன் அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து பதிவாளர் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011ல் விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த வில்லிப்புத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்குகளிலிருந்து அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை தாமாக முன்வந்து கிரிமினல் மனு ஆய்வு என்ற அடிப்படையில் வழக்கை விசாரணைக்கு எடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையும், அமைச்சர் உள்ளிட்ட குற்றம்சாட்டபட்டவர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். இந்நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் விசாரணைக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன் அனுமதி பெற்றுதான் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி ஆகியோருக்கு எதிரான வழக்கை தானாக முன்வந்து விசாரித்தாரா? இதுபோன்ற செயல்கள் நீதிமன்ற நடைமுறைகளுக்கு எதிரானதாகும். எம்பி – எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் அதிகாரம் உள்ளதா? ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்கும் அதிகாரமும் அவருக்கு இல்லை. நீதிபதி தன்னிச்சையாக வழக்கை எடுத்து விசாரிக்க முடியாது’ என்று வாதிட்டார்.

தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன் அனுமதி பெற்றுதான் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தாரா? அல்லது தன்னிச்சையாக விசாரிக்கிறாரா? என்பது குறித்து உயர் நீதிமன்ற பதிவாளர் வரும் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும்’ எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழக்கில் திருப்பம்.. தனி நீதிபதி விசாரிப்பது ஏன்? :பதிவாளர் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,K. K. S. S. R. ,Ramachandran ,Supreme Court ,NEW DELHI ,ICOURT ,Chief Justice ,Tamil ,Nadu ,Tamil Nadu ,K. K. S. S. R. Ramachandran ,Adilakshmi ,Sanmukmurthi ,K. K. S. S. R. Turnaround ,Dinakaran ,
× RELATED அமைச்சர் ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி