×

பெரியபாளையம் அருகே மாட்டு தொழுவமாக மாறிய பழைய அரசு பள்ளி கட்டிடம்: அகற்றி அரசு அலுவலகம் கட்ட கோரிக்கை

 

ஊத்துக்கோட்டை, ஜன. 29: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் ஊராட்சியில் சேதமடைந்து மாட்டு தொழுவமாக மாறிய பழைய அரசு பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு அரசு அலுவலகம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் கிராமத்தில் 50 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில் கன்னிகைப்பேர், ஜெயபுரம், மதுரவாசல், அழிஞ்சிவாக்கம், நெய்வேலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ – மாணவிகள் படித்து வந்தனர்.

இங்குள்ள பள்ளி கட்டிடம் ஓடு போட்ட வகுப்பறைகள் என்பதால், கடந்த 18 வருடங்களுக்கு முன்பு சேதமடைந்து காணப்பட்டது. இதனால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கன்னிகைப்பேர் கிராம எல்லை பகுதியில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் 12ம் வகுப்பு வரை புதிய கட்டிடம் கட்டப்பட்டது. பின்னர் மாணவர்கள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர்.

மேலும் பழைய கட்டிடம் தற்போது பழுதடைந்து ஆடு மாடுகள் கட்டும் தொழுவமாக மாறிவிட்டது. அதுமட்டுமல்லாமல் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர் சூதாட்டம், மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அக்கம் பக்கத்தில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் சிரமப்படுகிறார்கள். எனவே, இந்த பழைய உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை அகற்றி விட்டு அந்த இடத்தில் மின்வாரிய அலுவலகம் அல்லது மருத்துவமனை, விஏஒ அலுவலகம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து கிராம சபையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post பெரியபாளையம் அருகே மாட்டு தொழுவமாக மாறிய பழைய அரசு பள்ளி கட்டிடம்: அகற்றி அரசு அலுவலகம் கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : School ,Periyapalayam ,Uthukottai ,Kannikaipper panchayat ,Ellapuram Union ,Periyapalayam Kannikaippere ,Dinakaran ,
× RELATED ஊத்துக்கோட்டையில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு