×

பாஸ்ட் புட் கடையில் வாலிபர் மீது ‘பெப்பர் ஸ்பிரே’ அடித்த விவகாரம் திருவல்லிக்கேணி ரவுடி சகோதரர்கள் உட்பட 3 பேர் திருப்பூரில் கைது: என்கவுன்டரில் கொல்ல சதி என வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு

சென்னை: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் யாசின் பாஷா(24). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள பாஸ்ட் புட் கடை முன் நின்று சாப்பிட்டு ெகாண்டிருந்தார். அப்போது அதே கடைக்கு 3 பேர் பைக்கில் வந்தனர். உணவு ஆர்டர் செய்து விட்டு கடை முன் நின்றிருந்தனர். அவர்களை யாசின் பாஷா உற்று பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் 3 பேரில் ஒருவன், ‘ஏன் எங்களை உற்று பார்க்கிறாய்?’ என்று கேட்டு ஹெல்மெட்டை கழற்றி யாசின் பாஷாவை ஓங்கி அடித்துள்ளார். அதோடு உருட்டு கட்டையை எடுத்து ‘நாங்கள் யார் தெரியுமா? என்று கேட்டபடி தாக்கினர். ஒருவர் தடைசெய்யப்பட்ட ‘பெப்பர் ஸ்பிரே’ வை யாசின் பாஷா கண்ணில் அடித்தார். பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

கண் எரிச்சல் மற்றும் தாக்குதலில் காயமடைந்த யாசின் பாஷாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து யாசின் பாஷா ஐஸ் அவுஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, யாசின் பாஷாவை தாக்கியது, திருவல்லிக்கேணி ரவுடி தோட்டம் சேகர் என்ற தந்தையை கொலை செய்த, பிரபல தாதா மயிலாப்பூர் சிவக்குமாரை 20 ஆண்டுகள் காத்திருந்து கடந்த 2021ல் மேற்கு மாம்பலத்தில் வெட்டி கொன்ற மகன்களான ரவுடி அழகுராஜா, பாலாஜி மற்றும் நண்பர் விஷ்ணு என தெரியவந்தது. ரவுடி சகோதரர்கள் மீது கொலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

அதைதொடர்ந்து போலீசார் ரவுடி சகோதரர்கள் உட்பட 3 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தேடி வந்தனர். இதற்கிடையே தங்களை போலீசார் என்கவுன்டரில் சுட்டுத்தள்ள முடிவு செய்து இருப்பதாக, நண்பர்கள் மூலம் ரவுடி சகோதரர்களுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மூவரும், வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டனர். அதில், ‘எங்களுக்கு எது நேர்ந்தாலும் போலீசார் தான் காரணம்’ என கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் வீடியோ வெளியிட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர். அதில், 3 பேரும் திருப்பூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் திருப்பூர் சென்று, ரவுடி சகோதரர்களான அழகுராஜா, பாலாஜி மற்றும் நண்பர் விஷ்ணுவை நேற்று முன்தினம் கைது ெசய்தனர். பின்னர் 3 பேரையும் நேற்று இரவு சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடிகள் தங்களை ேபாலீசார் என்கவுன்டரில் கொலை செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பாஸ்ட் புட் கடையில் வாலிபர் மீது ‘பெப்பர் ஸ்பிரே’ அடித்த விவகாரம் திருவல்லிக்கேணி ரவுடி சகோதரர்கள் உட்பட 3 பேர் திருப்பூரில் கைது: என்கவுன்டரில் கொல்ல சதி என வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvallikeni ,Tirupur ,Chennai ,Yasin Pasha ,Rayapetta, Chennai ,Dr. Besant Road ,
× RELATED திருவல்லிக்கேணி பார்த்தசாரதி...