×

மருத்துவ ஊழியரை கார் ஏற்றி கொல்ல முயற்சி: அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி கைது

வேலூர்: வேலூரில் தனியார் மருத்துவமனை ஊழியரை கார் ஏற்றி கொல்ல முயன்ற அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி கைது செய்யப்பட்டார். வேலூர் அடுத்த பெருமுகை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு(44). இவர் தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 3ம் தேதி காலை சுரேஷ்பாபு வழக்கம்போல் தனது பைக்கில் மருத்துவமனைக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அலுமேலுமங்காபுரம் திரவுபதி அம்மன் கோயில் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் ஒன்று சுரேஷ்பாபு மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சுரேஷ்பாபுவை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அவர் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில் விபத்தை ஏற்படுத்திய கார் பள்ளிகொண்டா அடுத்த சதுரங்கபாளையம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாபுவை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாநகர மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ஸ்டான்லி ஜான் என்பவர் காரை எடுத்து சென்றதும், ரகுமான் என்ற டிரைவரை வைத்து சுரேஷ்பாபுவை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஸ்டான்லி ஜான், ரகுமான் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில், சென்னையில் பதுங்கியிருந்த வழக்கறிஞர் ஸ்டான்லி ஜானை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

விசாரணையில், சுரேஷ்பாபுவுக்கும், ஸ்டான்லி ஜானுக்கும் ஏற்கனவே முன்விரோத தகராறு இருந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் சுரேஷ்பாபு கடந்த 4ம் தேதி ஆஜராக இருந்தார். இந்த வழக்கில் ஆஜராகாமல் இருக்க சுரேஷ்பாபு மீது கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து கார் டிரைவர் ரகுமான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post மருத்துவ ஊழியரை கார் ஏற்றி கொல்ல முயற்சி: அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Vellore ,Suresh Babu ,Ambedkar ,Dinakaran ,
× RELATED பெண் தூய்மைப் பணியாளர் மீது பைக்கால் மோதிய இளைஞர்!